Published : 10 Aug 2025 12:06 AM
Last Updated : 10 Aug 2025 12:06 AM
சென்னை: புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது அவரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அன்றையை தினமே முதல்வர் ஸ்டாலினை 2 முறை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ்-ஐ தொடர்பு கொண்ட பாஜகவினர், அவரசப்படவேண்டாம் என அவரை சமாதானம் செய்து மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சூழ்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (10-ம் தேதி)நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவருகை தரும் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் பல்வேறுஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாஜகவினர் ஓபிஎஸ்-பி.எல்.சந்தோஷ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது குறித்து பேசியுள்ளனர். மேலும் வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி கூறப்பட்டதாக தெரிகிறது. இதற்கு தற்போது எதுவும் கூற முடியாது என ஓபிஎஸ் கூறியதாகவும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு தெரிவிப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT