Published : 10 Aug 2025 12:17 AM
Last Updated : 10 Aug 2025 12:17 AM
சென்னை/விழுப்புரம்: ராமதாஸுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அவருடன் இருக்கும் தீயசக்திகள், குள்ளநரி கூட்டம் தடுக்கிறது என பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள்அடுத்த ஓராண்டுக்கு அந்த பொறுப்புகளில் அப்படியே தொடர்வார்கள். மீண்டும் பாமகவின் உட்கட்சி தேர்தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அரங்கில் கூடியிருந்த 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.
அதேபோல், வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வரும் ஆக. 15-ம் தேதி தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய ஆட்சியில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்க உழைப்பது, திமுக அரசை வரும் தேர்தலில் வீழ்த்துவது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: இப்போதைய இலக்கு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மெகா கூட்டணி அமைப்போம். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தான் நம்முடைய குலதெய்வம். இங்கு சாமி பிரச்சினை இல்லை. பூசாரிதான் பிரச்சினை. நிரந்தரமாக அவருக்கு இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது. அவர் வருவார் என்று நம்புகிறேன். எனக்கு தலைவர் பதவி மீது ஆசை கிடையாது. என்னுடைய நோக்கமே சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான்.
பொதுக்குழு கூட்டம் நடத்த நமக்கு தடைஇல்லை என நீதிமன்றம் கூறியதை கொண்டாட மனமில்லை. ராமதாஸுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவருடன் இருக்கும் சில தீயசக்திகள், குள்ள நரிக் கூட்டம் அதனை கெடுக்கின்றனர். 40 முறைக்கு மேல் நான் பேசிவிட்டேன். நமக்குள்ளேயே மாறி மாறி பதிவிட வேண்டாம். சண்டையிட வேண்டாம். இப்படி எல்லாம் ஒரு சூழல் வரும் என்று நான் நினைத்து பார்த்ததே கிடையாது. நான் உறுதியாக நிற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராமதாஸ் கருத்து: பூம்புகாரில் இன்று (ஆக. 10) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கு தைலாபுரம் இல்லத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று பிற்பகல் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மாநாட்டுக்கு வாருங்கள்” என்றார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல், அங்கிருந்து ராமதாஸ் சென்றுவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT