Published : 10 Aug 2025 12:10 AM
Last Updated : 10 Aug 2025 12:10 AM
சென்னை: அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணிநியமனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பஇஎஸ்சி) மூலமாகவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும், காவல், தீயணைப்பு, சிறைத் துறைப் பணியாளர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் எம்ஆர்பி எனப்படும் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும், அரசுப் பள்ளிகளிலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசுப் பணியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே, 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் அரசுப் பணியில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் மற்றும் சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாகவுள்ள 30,219 பணியிடங்கள் என மொத்தம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்”என்று குறிப்பிட்டார். இந்நிலையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் (வெளிமுகமை) ஆட்களை நியமிக்கும் பொறுப்பு சென்னை கிண்டியில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அவுட்சோர்சிங் பணிநியமன பணிகளுக்கான முதல் கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை தேர்வு செய்யும் ஒப்பந்தப்புள்ளியையும் கோரியுள்ளது.
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசுத் துறைகளில் ஏற்படும் தற்காலிக பணியிடங்கள், குறிப்பாக கணக்கு அலுவலர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணிகள் அவுட்சோர்சிங் முறையில் வெளிநிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். நிரந்தர பணியிடங்கள் வழக்கம்போல தேர்வாணையங்கள் வாயிலாகவே நிரப்பப்படும்” என்றார்.
அவுட்-சோர்சிங் பணிநியமன முறையால் அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார் கூறியதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதலில் ஆங்காங்கே அவுட்சோர்சிங் முறை நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது பல துறைகளில், குறிப்பாக சுகாதாரத் துறையில் அதிக எண்ணிக்கையில் அவுட்சோர்சிங் முறை நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவுட்சோர்சிங் முறை நியமனத்தால் அரசின் செலவு குறையும் என்று அரசு கருதலாம்.
ஆனால், நிரந்தர அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு பொறுப்புணர்வு உண்டு. அதேநேரத்தில், அவுட்சோர்சிங் ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட மாட்டார்கள். இதனால். அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறும். அவுட்சோர்சிங் முறையால் இளைஞர்களின் அரசு வேலை கனவும் தகர்ந்து போகும். எனவே, தமிழக அரசு அவுட்சோர்சிங் முறை நியமனத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT