Published : 09 Aug 2025 06:01 PM
Last Updated : 09 Aug 2025 06:01 PM
சென்னை: முன்பகை மற்றும் மது குடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பிஹாரைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 18 வது உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது கலாம் மற்றும் இவரின் சகோதரர் முகமது இஜாஜ் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் தங்கி அங்குள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வந்தனர். அதே கடையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அலி உசேன் என்ற குட்டி என்பவரும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் முகமது இஜாஜ் மற்றும் அலி உசேன் இருவரும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் எனவும் தெரிகிறது.
இந்நிலையில் அலி உசேன் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை முகமது இஜாஜ் குடித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், முகமது இஜாஜை கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி அலி உசேன் கொலை செய்தார்.
கொலை சம்பவம் தொடர்பாக முகமது கலாம் அளித்த புகாரில், சென்னை அண்ணா சாலை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இதன் பின்னர் தலைமறைவாக இருந்த அலி உசேனை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை 18 ஆவது உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 6 ஆயிரத்து 500 அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT