Published : 09 Aug 2025 04:59 PM
Last Updated : 09 Aug 2025 04:59 PM
பல்லாவரம்: இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து, “இதுதான் வளர்ச்சி இதுதான் வழி” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியான பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா இன்று (ஆக்.9) பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.17,000 கோடி மதிப்பிலான 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசுகையில், “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். கல்வியும் - மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.
அதேபோல, தாம்பரத்தை சுற்றியிருக்கும் மக்களின் நன்மைக்காக, பயன்பாட்டிற்காக தாம்பரம் அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தரம் உயர்த்தியிருக்கிறோம். மேலும், 7 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல் மருத்துவப் பிரிவையும் உருவாக்கியிருக்கிறோம்.
அதோடு, தாம்பரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகத்தையும் திறந்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் சென்னையின் புறநகர் பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு - உடுக்க உடை - இருக்க இடம். இதில், உணவும் - உடையும் எளிதாக கிடைத்துவிடலாம்; ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது. ஏனென்றால், நிலம்தான் அதிகாரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும் - தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான். அதனால்தான், பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்.
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை மூலமாக பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறோம். சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதை நம்முடைய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. இப்படி வழங்கப்படுகின்ற “கலைஞர் கனவு இல்லம்” - “அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்” போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
ஐந்து மாதத்திற்குள் ஐந்து லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்தோம். இதனால், ஐந்தே மாதத்தில் எத்தனை பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது தெரியுமா? 7 லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது.
இதுவும் போதாது என்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம். அதில், 79 ஆயிரத்து 448 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, 63 ஆயிரத்து 419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20 ஆயிரத்து 221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள பட்டாக்களை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படி, மே 2021-லிருந்து, தற்போது வரைக்கும் வழங்கப்பட்டிருக்கும் மொத்த பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 17 இலட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். அதாவது பல லட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்.
இதில், இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41 ஆயிரத்து 858 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். இந்த விழாவில், ஆயிரத்து 672 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன்.
தென்குமரியிலிருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம். தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம். வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம். இதனால்தான், 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. விரைவில் இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும்.
2011-லிருந்து 2021 வரைக்கும் பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில், மீட்டெடுத்து, வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு நாம் சேர்த்திருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவரது நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார். அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான். இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை - இந்த ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறானே. இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.
பழனிசாமி கூட்டணி வைத்திருக்கும் மத்திய அரசால்கூட மறைக்க முடியாத - மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நாம் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்.
இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து, “இதுதான் வளர்ச்சி இதுதான் வழி” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம். அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக்கும், நான் மக்களுக்காக உழைப்பவன், இந்த ஸ்டாலினை மக்கள் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும்” இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், மா. சுப்பிரமணியன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, எஸ்.எஸ்,பாலாஜி, வரலட்சுமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் பெ. அமுதா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், நில நிர்வாக ஆணையர் பழனிசாமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT