Published : 09 Aug 2025 04:27 PM
Last Updated : 09 Aug 2025 04:27 PM
மாமல்லபுரம்: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வதற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தின் இன்று (ஆக.9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்: ‘தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்துத் தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால், அது தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி தான்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வரி முதலில் 175% வரையிலும், அதன்பின் ஆண்டுதோறும் 6% வரையிலும் உயர்த்தப்பட்டு வருகிறது. குடிநீர் வரிகள் அளவே இல்லாமல் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. சட்டம் - ஒழுங்கு தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை தமிழகத்தில் 7,000 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் குழந்தைகள், மாணவிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் அனைத்து ஊர்களிலும், அனைத்துத் தெருக்களிலும் கஞ்சா வணிகம் தலைவிரித்து ஆடுகிறது. உழவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது.திமுக ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.13% என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பதிலிருந்தே திமுக அரசு வேளாண் துறை வளர்ச்சிக்கு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது ஐயமின்றி உறுதியாகிறது.
இளைஞர்களுக்கு அரசுத் துறையில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தனியார்துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் திமுகவின் சில உயர்நிலைத் தலைவர்களைத் தவிர வேறு எவரும் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அகற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்’ என்று பாமக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு தீர்மானங்கள் > 1. பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம்: 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவியில் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவியில் ம.திலகபாமாவும் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
2. வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழக அரசும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இதை செய்ய மறுத்தால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
3. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
4. தற்போது பதவியில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வன்னியர் இடஒதுக்கீடு பரிந்துரை அளிப்பது உள்ளிட்ட அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை. இதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
5. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.
6. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய திராவிட மாடல் அரசுக்கு கண்டனம
7. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
8. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.
9. தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
10. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் வாயிலாக 31 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனால் இது அப்பட்டமான பொய் ஆகும். இது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என பாமக கோருகிறது.
11. தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.
12. காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
13. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
14. அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
15. அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
16. மக்களை ஏமாற்ற மோசடித் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்
17. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
18. அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.
19. சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT