Published : 09 Aug 2025 05:07 AM
Last Updated : 09 Aug 2025 05:07 AM
சென்னை: நீதிபதியின் அழைப்பை ஏற்று பாமக தலைவர் அன்புமணி தனது வழக்கறிஞர்களுடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காணொலி மூலம் ஆஜரானார். இருவரிடமும் தனது சேம்பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசாரித்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணிக்கு இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்குநாள் அதிகரித்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் ஆக.9-ம் தேதியான இன்று பொதுக்குழு கூட்டம் நடத்த அன்புமணி அழைப்பு விடுத்தார். இதற்கு தடை கோரி ராமதாஸ் ஆதரவு பொதுச் செயலாளரான முரளிசங்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் அருள், வி.எஸ். கோபு ஆகியோரும், அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் கே.பாலு ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் தன்னால் 10 நிமிடங்களில் முடிவு எடுத்துவிட முடியும் என்றாலும், இருவரது நலன் கருதியும் அவர்களுடன் நேரில் பேச விரும்புகிறேன். எனவே ராமதாஸும் அன்புமணியும் மாலை 5.30 மணிக்கு தனது சேம்பருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதன்படி அன்புமணி தனது வழக்கறிஞர்களுடன் நேற்று நீதிபதி சேம்பரில் ஆஜரானார். உடல்நிலை காரணமாக ராமதாஸ் காணொலி மூலம் ஆஜரானார். இருவரிடமும் சுமார் 30 நிமிடங்ளுக்கும் மேலாக நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாமக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கின் விசாரணை நேற்றிரவு நீதிபதி சேம்பரில் மீண்டும் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜரானார்.
அதன்பிறகு நேற்றிரவு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அன்புமணி ஆக.9 (இன்று) நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது” எனக்கூறி ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதி மன்றத்தை நாடவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT