Published : 08 Aug 2025 04:38 PM
Last Updated : 08 Aug 2025 04:38 PM
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சீனி என்பவரின் விசைப்படகில் கடலுக்கு சென்ற தோபி யாஸ் (37), குரு சாமி (39), பரத் (31), ரவி (47), ஜோஸ் பாரதி (22), மரிய பிரவீன் (31), மனோ சந்தியா (32), பிலிப்பியர் (43), மேத்யூ கினலடன் (24), டேனியல் ராஜ் (33) ஆகிய 10 மீனவர்களை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் புதன்கிழமை காலையில் சிறைப்பிடித்தனர்.
10 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவலில் வெளிச்சாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் (வெள்ளிக்கிழமை) இன்று இரண்டாவது நாளாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பாம்பனில் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி இறங்குதளத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டிருந்தது. மேலும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT