Published : 08 Aug 2025 03:14 PM
Last Updated : 08 Aug 2025 03:14 PM
சென்னை: மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு பெயரை மட்டும் மாற்றினால் சமூகநீதியை நிலைநாட்டிட முடியுமா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு, சீர்மரபினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை, ‘சமூக நீதி விடுதிகள்’ என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பர திட்டம் அபத்தமானது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி.
‘ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா’ என்ற நகைச்சுவை வசனத்தை போல, போதிய ஆசிரியர்கள், குடிநீர், கழிவறை, தரமான உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றின் பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிட முடியுமா என்பதை முதல்வர் ஸ்டாலின் சிந்திக்க வேண்டும்.
மேலும், பொதுவெளியில் சாதிரீதியிலான கருத்துகளை முன் வைக்கும் தலைவர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டு, சாதிய இயக்கங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சாதியை ஒழிக்கப் போவதாக போலித்தன அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கு, பல போராட்டங்களாலும் உயர் தியாகங்களாலும் பெறப்பட்ட சமூகப் பாதுகாப்பினை அழித்தொழிக்க எந்த உரிமையும் இல்லை.
கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு விடுதிகளை சீர்செய்வதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் பெயர் மாற்றுவதைக் கொண்டு அவலத்தை மூடி மறைக்க முயல்வது ஒரு நல்ல தலைமைக்கு அழகல்ல. எனவே, முதல்வர் ஸ்டாலின் சமூகநீதி விடுதி என்ற பெயர் மாற்ற முடிவினைத் திரும்பப் பெற வேண்டும். கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு மாணவர் விடுதிகளை சீர்செய்வதில் ஆளும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT