Published : 08 Aug 2025 01:24 PM
Last Updated : 08 Aug 2025 01:24 PM
சூணாம்போடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரியின் மூலம் 150-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் பரப்பளவுகொண்ட விளை நிலங்களுக்கு பாசன வசதி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வட்டார வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளததால், ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து,பாசன வசதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் மணப்பாக்கம் ஏரியை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், ஏரியின் மதகுகள், நீர்வரத்து கால்வாய்கள், கரைகள் மற்றும் பாசன கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மேலும், இப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால் சீரமைக்கப்பட்ட ஏரி விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், விவசாயிகள் மற்றும் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று ஏரியை திரும்ப பெற்றுக்கொண்டனர். மேலும், தனியார் நிறுவனம் சார்பில் சீரமைக்கப்பட்ட ஏரியின் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனவசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஏரியின் பாசன கால்வாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் முழுவதுமாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் கிராம மக்கள் கூறியதாவது: சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ஏரியின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டதால், மேற்கண்ட ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இதேபோல்,ஊராட்சிகளில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் நிறுவனம் மூலம் ஏரி சீரமைக்கப் பட்டதால் பாசன வசதிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர். எனினும், இதேபோல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகளை சீரமைக்க மாவட்டநிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT