Published : 08 Aug 2025 10:12 AM
Last Updated : 08 Aug 2025 10:12 AM
தேனி திமுக எம்பி-யான தங்கதமிழ்ச்செல்வனும் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜனும் ‘முட்டாப் பயலே’ என ஒருவரை மாற்றி ஒருவர் அரசு நிகழ்ச்சியில் அர்ச்சனை செய்து கொண்ட விவகாரம் அறிவாலய விசாரணைக்கு வருமளவுக்கு விவகாரமாகி இருக்கிறது.
கடந்த 2-ம் தேதி, ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட சக்கம்பட்டியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் தொடக்க விழாவில் தான் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் இப்படி வசை மாரி பொழிந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் தனது படத்தைப் போடவில்லை என முதலில் பிரச்சினையைக் கிளப்பியது தங்கதமிழ்ச்செல்வன் தான் என்கிறார்கள்.
இந்த நிலையில், பயனாளி ஒருவருக்கு கொடுக்க வேண்டிய அரசாணையை தங்கத் தமிழ்ச்செல்வன் கொடுக்கப் போக, அதைப் பறித்து பயனாளிக்கு வழங்கினார் மகாராஜன். இதில் சூடான தங்கம், அந்த ‘முட்டாப் பய’ வசனத்தை எடுத்துவிட, மகாராஜனும் அதை ‘ரிபீட்டு’ செய்தார். நிலைமை ரசாபாசமாவது தெரிந்ததும் அதிகாரிகள் நிகழ்ச்சியை அவசரகதியில் முடித்துக்கொண்டு மூட்டையைக் கட்டினார்கள்.
“தங்கமும் மகாராஜனும் பேனர்ல படம் போடாததால மட்டும் மோதிக்கல. அவங்களுக்குள்ளார ரொம்ப நாளாவே பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு” என்று சொல்லும் ஆண்டிபட்டி திமுக-வினர், “கம்பத்துக்காரரா இருந்தாலும் தங்கதமிழ்ச்செல்வனின் அரசியல் தொடக்கம் ஆண்டிபட்டி தான். 2001-ல் ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆனவரு, ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செஞ்சார்.
அதன் பிறகு 2011, 2016 தேர்தல்கள்ல ஆண்டிபட்டி எம்எல்ஏ-வாக இருந்தாரு. அப்போதே தங்கத்துக்கும் மகாராஜனுக்கும் அவ்வளவா பிடிச்சிக்கிடாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னாடி தங்கம் தினகரன் பக்கம் போனதால 2019 இடைத் தேர்தல்ல மகாராஜன் ஜெயிச்சாரு. அதுக்கப்புறம் திமுக-வுல இணைஞ்ச தங்கம், 2021-ல் மீண்டும் ஆண்டிபட்டியை எதிர்பார்த்தாரு. ஆனா, தலைமையிடம் போராடி தொகுதிய தக்கவெச்சிக்கிட்டாரு மகாராஜன். இதனால போடியில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து நின்னு தோற்றுப் போனார் தங்கம். இதுல மகாராஜன் மீது தங்கத்துக்கு கெட்ட கோபம்.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தல்ல தங்கம் தேனி தொகுதியில போட்டியிட்டப்ப மகாராஜன் தரப்பு சரிவர தேர்தல் பணி செய்யலைன்னு புகார் சொன்னாங்க. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில தனக்கு வாக்குகள் குறைஞ்சு போனதா கட்சியினர் முன்னிலையிலேயே மகாராஜன் மேல தங்கம் பழிபோட்டாரு.
இதுக்கு நடுவுல, ஒன்னா இருந்த தேனி மாவட்ட திமுக-வை ரெண்டாப் பிரிச்சு வடக்கு மாவட்டத்துக்கு தங்கமும் தெற்கு மாவட்டத்துக்கு கம்பம் ராமகிருஷ்ணனும் செயலாளர் ஆக்கப்பட்டாங்க. இதுல, தெற்கு மாவட்டத்துக்குள் ஆண்டிபட்டி வந்துட்டதால தங்கத்தை பத்தி அலட்டிக்காம ராமகிருஷ்ணனை பிடிச்சிக்கிட்டாரு மகாராஜன்.
ஆனா, எம்பி ஆனதும் ஒட்டுமொத்த தேனி மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டுல எடுத்துக்கிட்டாரு தங்கம். ஆண்டிபட்டி தொகுதியில மகாராஜன் இல்லாமலேயே நிகழ்ச்சிகள்ல பங்கெடுக்க ஆரம்பிச்சாரு. அப்பப்ப தனது மகன் நிஷாந்தையும் முன்னிலைப்படுத்த ஆரம்பிச்சார். இதெல்லாம் மகாராஜன் தரப்புக்கு பிடிச்சுக்கிடல. இந்த நிலையில தான், பொது நிகழ்ச்சின்னுகூட பார்க்காம தங்கமும் மகாராஜனும் முட்டாப் பய வசனம் பேசி மோதிக்கிட்டிருக்காங்க” என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், “அரசு விழா நெறிமுறைப்படி எம்பி-யின் போட்டோ விழா பேனரில் இடம்பெற வேண்டும். இந்த புரோட்டோகால் மீறப்பட்டது குறித்துத்தான் எம்எல்ஏ-வை கடிந்து கொண்டேன். ஆனால் அவர், மேடை என்பதை மறந்து ஒருமையில் திட்டத் தொடங்கினார். பயனாளிகளுக்கான நலத்திட்ட ஆணைகளை என்னிடம் இருந்து பறித்து அவரே வழங்கினார்” என்றார்.
மகாராஜனோ, “வயதில் மூத்தவன் என்ற மரியாதைகூட இல்லாமல் என்னை முதலில் திட்டத் தொடங்கியது எம்பி தான். அதனால் நானும் உணர்ச்சிவசப்பட்டு திட்டும் சூழல் ஏற்பட்டது. விளம்பர பேனரை வைத்தது தனியார் அமைப்பு. அதில் எம்பி படம் இல்லாதது எனக்குத் தெரியாது. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றார்.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சியில் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனையும் மகாராஜனையும் திமுக தலைமை அறிவாலயத்துக்கு வரவைத்து விசாரணை நடத்தியதாகச் சொல்லும் தேனி திமுக-வினர், “இனி ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கி அடக்கி வாசிப்பாங்க” என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT