Published : 08 Aug 2025 05:48 AM
Last Updated : 08 Aug 2025 05:48 AM
மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.
திருச்சி காஜா மலை பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்டலின் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அதை காலி செய்யுமாறு ஓட்டல் நிர்வாகத்துக்கு சுற்றுலா துறை உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி ஓட்டல் நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தனி நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சுற்றுலாகழகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அரசு குத்தகை காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை. அந்த ஓட்டலை சுற்றுலா கழகமே ஏற்று நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவை கும்கி பட யானையுடன் ஒப்பிட்டு தனி நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கோயில் யானையை கும்கி யானையாக பயன்படுத்துவதையும், இறுதியில் கும்கி யானை இறந்துபோவதையும் சுட்டிக்காட்டி சுற்றுலாத் துறை ஓட்டல் நடத்த முன்வந்திருப்பதை விமர்சனம் செய்துள்ளார். இது சரியல்ல. இதனால் தனி நீதிபதி உத்தரவில் இடம் பெற்றுள்ள அந்த கருத்துகளை நீக்கவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி ஜெகதீஸ் சந்திரா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குத்தகை உரிமம் முடிந்த பிறகு அதை நீட்டிப்பதை உரிமையாக கருத முடியாது. அது முழுக்க முழுக்க அரசின் முடிவு.
தமிழ்நாடு சுற்றுலா கழகம் 1971 முதல் பல்வேறு இடங்களில் ஓட்டல்களை நடத்தி வருகிறது. கடந்த 2023-24-ல் ரூ.32.33 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதனால் தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஓட்டல் நடத்தும் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
எஸ்ஆர்எம் ஓட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழக சுற்றுலாத் துறை ஓட்டல்கள் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் நீக்கப்படுகின்றன. மேல்முறையீடு மனு ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT