Published : 08 Aug 2025 05:12 AM
Last Updated : 08 Aug 2025 05:12 AM
சென்னை: டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார். மேலும், கூட்டணி நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். அண்ணாமலைக்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை நேற்று விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார்.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய தேசிய தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அண்ணாமலைக்கு வழங்கப்பட இருக்கும் தேசிய அளவிலான பொறுப்பு, தமிழக அரசியல் நிலவரம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி விவகாரங்கள், பிரதமரின் திருவண்ணாமலை பயணம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT