Published : 08 Aug 2025 05:00 AM
Last Updated : 08 Aug 2025 05:00 AM
புதுடெல்லி: துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது உள்ளிட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர். அதையடுத்து அந்த 10 சட்ட மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டன.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளை எதிர்த்து பாளையங்கோட்டையை சேர்ந்த பாஜக வழக்கறிஞரான கே.வெங்கடாச்சலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இடைக்கால தடை அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு கடந்த மே மாதம் இடைக்கால தடை விதித்தனர்.
இந்த இடைக்காலத்தடையை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் தமிழகஅரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கு விசார ணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், எனக் கோரினார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான 3 வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆக.13-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT