Published : 07 Aug 2025 02:57 PM
Last Updated : 07 Aug 2025 02:57 PM

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ரூ.1 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

சென்னை: அரசு செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து ஜூலை 14 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல; இதற்கு எந்த சட்ட பலமும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை என்றும் அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை எனக் கூறி வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x