Last Updated : 07 Aug, 2025 02:08 PM

 

Published : 07 Aug 2025 02:08 PM
Last Updated : 07 Aug 2025 02:08 PM

தனியார் விளம்பர பேரிகார்டுகளை அகற்றக் கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றிவிட்டு, உள்ளாட்சி விதிப்படி பேரிகார்டுகள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளாக பல மடங்கு அதகரித்துள்ளது. இதனால் ஏற்படும் வாகன நெரிசல் அதிகரித்து விபத்துகளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2022ல் 64,105 விபத்துகளில் 17,884 பேர் உயிரிழந்துள்ளனர், 67,703 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் வைக்கப்பட வேண்டும். இருப்பினும் போலீஸார் திட்டமிடல் இல்லாமல் சாலையின் நடுவில் இரும்பு பேரிகார்டுகள் வைப்பதால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது.

மேலும் பேரிகார்டுகளை முழுமையாக மூடி வைப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. போக்குவரத்து மாற்றுத்துக்காகவும், அவசர காலங்களுக்காக தற்காலிக நடைமுறையாகவே பேரிகார்டுகள் வைக்கப்படுகிறது. அந்த பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இந்த விளம்பரங்களும் விபத்துகள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இதனால் மாநில, தேசிய நெடுஞ்சாலகள் மற்றும் பொது இடங்களில் தனியார் விளம்பரங்களுடன் வைக்கப் பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும், தமிழ்நாடு உள்ளாட்சி விதிகள் அடிப்படையில் சரியான அளவு மற்றும் முறைகளில் பேரிகார்டுகள் அமைக்க உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கவும், எதிரில் வாகனங்கள் வரும் வகையில் பேரிகார்டுகள் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர், மாநில நெடுஞ்சாலை துறையின் முதன்மைச் செயலர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x