Published : 07 Aug 2025 12:35 PM
Last Updated : 07 Aug 2025 12:35 PM
சென்னை: பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று.
தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதன் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜேஆர்டி டாடா (JRD Tata) சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
அவரது வழியிலான நமது திராவிடமாடல் அரசும், போரூர் வெட்லாண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.
காலநிலை மாற்றம் உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதன் அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன். தந்தையின் பணியையும் - புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதன் பணி சிறக்கவும் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT