Published : 07 Aug 2025 08:36 AM
Last Updated : 07 Aug 2025 08:36 AM
ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியை ஒதுக்கிவைத்துவிட்டு அய்யா நடத்தும் இந்த மாநாட்டால் பாமக-வுக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என பதறுகிறார்கள் பாட்டாளி சொந்தங்கள்.
பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வெடித்துள்ள உரிமை மோதல் பிரச்சினையானது நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் நிலையில், மகனைப் புறக்கணித்துவிட்டு பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்த ஆயத்தமாகி வருகிறார் ராமதாஸ். கடந்த 20 ஆண்டுகளாக அன்புமணி இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்திப் பழக்கமில்லாத ராமதாஸ், முதல்முறையாக மகனின் தயவில்லாமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க, தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநாட்டில் 3 லட்சம் மகளிர் பங்கேற்க வேண்டும் என்பது அய்யாவின் அன்புக்கட்டளை என்கிறார்கள்.
மகளிர் மாநாட்டுக்கு அன்புமணியை அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்கும் போதெல்லாம், “அழைப்பு விடுப்போம்... விடுக்கப்படும்... எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறோம்; அனைவரும் வரலாம்” என பட்டும் படாமலேயே பதிலளித்து வருகிறார் ராமதாஸ். ஆனால், மாநாட்டை முன்னின்று நடத்தும் வன்னியர் சங்கத்தினரோ, “அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” எனச் சொல்கிறார்கள்.
அன்புமணிக்கு மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களையும் ஒதுக்கிவைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், மகளிர் மாநாட்டில், அழைப்பில்லாமல் அன்புமணியும் அவரது விசுவாசிகளும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சேலம் மேற்கு எம்எல்ஏ-வும், பாமக (ராமதாஸ் தரப்பு) மாநில இணை பொதுச்செயலாளருமான அருளிடம் கேட்டபோது, “மகளிர் மாநாட்டுக்காக அவருக்கு (அன்புமணி) அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து அய்யாவுக்குத்தான் தெரியும். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அழைப்பு அனுப்பப்பட்ட விவரம் தொடர்பாக நான் வேண்டுமானால் அய்யாவிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என முடித்துக் கொண்டார்.
ராமதாஸுக்கு மிக நெருக்கமான புள்ளிகளில் ஒருவரான அருள், தனக்குத் தெரியாது என்று சொல்லும்போதே அய்யா தரப்பில் இருந்து சின்ன அய்யாவுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.
இது தொடர்பாக பாமக (அன்புமணி தரப்பு) மாநில பொதுச் செயலாளரான வடிவேல் ராவணனிடம் கேட்டதற்கு, “சின்ன அய்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று எனக்கு தெரியாது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் அழைப்பு கிடையாது. நாங்கள் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தலைவர்தான் (அன்புமணி) முடிவெடுப்பார்” என்றார்.
பொதுவான நிலைப்பாட்டில் இருக்கும் பாமக-வினரோ, “பாமக-வில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க பூம்புகார் மகளிர் மாநாடு காரணமாக அமைந்துவிடுமோ என அச்சப்படுகிறோம்.
அப்பாவும் பிள்ளையும் போட்டி பொதுக்குழுக்களை கூட்டி, ஒருவருக்கு ஒருவர் எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுகிறார்கள். விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என இருவரும் நினைத்தாலும் இரு தரப்பிலும் இருக்கும் சிலர் இந்தப் பகையை தூபம் போட்டு வளர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது புரியாமல் யார் பெரியவர் என பார்த்துவிடுவோம் என அப்பாவும் பிள்ளையும் முஷ்டியை தூக்கிக் கொண்டு நிற்கின்றனர்.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு இருவரும் மகளிர் மாநாட்டில் ஒன்றாக கைகோக்க வேண்டும். அப்போது தான் பாமக-வுக்கான பழைய மரியாதை கிடைக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT