Published : 07 Aug 2025 12:31 AM
Last Updated : 07 Aug 2025 12:31 AM

அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழக பொருளாதார வளர்ச்சி - முதல்வர் பெருமிதம்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 2,538 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா, துறை செயலர் தா.கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள்.

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில்உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் - இளநிலை பொறியாளர் (திட்டமிடல்), பணி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு 2,538 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

14 ஆண்டுகளுக்கு பிறகு.. மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2024-25-ம் ஆண்டில், தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2010-11 நிதி ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் திமுக ஆட்சியில், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது.

நாட்டிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் திகழ்கிறது. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி. இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில்தான் இந்த வெற்றியை நாம் அடைந்துள்ளோம். என்னை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தமிழக மக்களுக்கு இந்த வெற்றிச் செய்தியை காணிக்கை ஆக்குகிறேன். எனினும், இந்த இலக்கோடு திருப்தி அடைய மாட்டேன். இன்னும் அதிகஉயரத்தை நாம் அடைய வேண்டும். அதை நோக்கிய பயணத்தை திராவிட மாடல் 2.0-வில் தொடர்வோம். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இதன்மூலம் 2,538 குடும்பங்களின் வாழ்க்கையில் இந்த அரசு ஒளியேற்றி வைத்துள்ளது.

ரூ.10.63 லட்சம் கோடி முதலீடு: கடந்த 4 ஆண்டுகளில், 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் ரூ.10.63 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடுகள் செய்துள்ளன. இதனால், 2 லட்சத்து 30 ஆயிரத்து 856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் பேர், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 4 லட்சம் மாணவர்கள், புதுமைப்பெண் திட்டத்தில் 6 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அடுத்ததாக, கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம். இதேபோல, அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும், இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வரப்போகின்றன. அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டோம். அந்த வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ்.சமீரன், பேரூராட்சிகள் இயக்குநர் எம்.பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x