Published : 06 Aug 2025 01:10 PM
Last Updated : 06 Aug 2025 01:10 PM
சென்னை: புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னரான முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் வளர்ந்துகொண்டுள்ளது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து பணியாற்றுவேன்” என்று கூறினார். இந்த சந்திப்பின்போது தமிழக அமைச்சர் ரகுபதி உடனிருந்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமான் 2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும்- கார்த்திக் தொண்டைமானுக்கும் இடையே தொடக்கம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
கார்த்திக் தொண்டைமானின் தந்தை விஜயரகுநாத தொண்டைமான் காங்கிரஸ் கட்சி சார்பில் 1967, 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். கார்த்திக் தொண்டைமான் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கி, பின்னர் திமுகவில் இணைந்தார்.
2005 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட இவர் அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். புதுக்கோட்டை தொகுதியில் 2016, 2021ஆம் சட்டப்பேரவை தேர்தல்களில் திமுகவே வென்றது. இந்த நிலையில், கார்த்திக் தொண்டைமான் திமுகவுக்கு சென்றது அக்கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT