Last Updated : 06 Aug, 2025 12:46 PM

3  

Published : 06 Aug 2025 12:46 PM
Last Updated : 06 Aug 2025 12:46 PM

சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு: மேற்கு மண்டல ஐஜி தகவல்

கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் குடிமங்கலம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். (இடது) : உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்

உடுமலை: உடுமலை அருகே தந்தை - மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்படட்உள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. தோட்டப்பராமரிப்புக்காக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி காமாட்சி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டன் (20). அவரது மனைவி சபீனா ஆகியோரும் தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர்.

நேற்று மூர்த்தியின் 2 வது மகன் தங்கபாண்டி (28) தந்தையை பார்பதற்காக வந்துள்ளார். இரவு கறி விருந்துடன் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் தங்கபாண்டிக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் மூர்த்தி காயம் அடைந்தார். தகராறு முற்றிய நிலையில் பண்ணை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக குடிமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ் ஐ சண்முகவேலுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநர் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீஸார் வருவதை அறிந்து தங்கப்பாண்டி தோப்புக்குள் மறைந்திருந்துள்ளார். உடனடியாக காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். மேலும் உடன் சென்றவர்களையும் அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார்.

ஓட்டுநர், பண்ணை மேலாளர் அங்கிருந்து தப்பி வந்த குடிமங்கலம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஐஜி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது: “குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர்களிடம் விசாரிப்பதன் மூலம் யார் யார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x