Published : 06 Aug 2025 09:54 AM
Last Updated : 06 Aug 2025 09:54 AM
முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய விவகாரத்தை வைத்து ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்க, கூட்டணிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை கொஞ்சம் அடக்கிவாசிக்க வைக்க, மாற்று முகாம் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகளை திமுக ஊக்கப்படுத்தி வருவதாகவும் ஒரு செய்தி கிளம்பி இருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த தனது கூட்டணியை தொடர்ந்து வெற்றிக் கூட்டணியாக தக்கவைத்து வருகிறது திமுக. இத்தகைய உறுதித் தன்மை இல்லாததால் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி வியூகங்களை மாற்றிக் கொண்டே வருகிறது அதிமுக. இப்போது பாஜக-வை தவிர யாரெல்லாம் அந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதுகூட நிச்சயமாக தெரியவில்லை. ஆனாலும் வெற்றிக் கூட்டணியை அமைப்போம் எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் இபிஎஸ்.
இந்தச் சூழலில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ஓபிஎஸ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதும், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நலம் விசாரித்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மூவருமே, ஸ்டாலினை சந்தித்ததும் தொடர்பு கொண்டு பேசியதும் அவரது உடல் நலன் குறித்து விசாரிக்கவே என்று சொன்னாலும், இதை திமுக வேறுவிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் “இம்முறை எங்களுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என திமுக-வுக்கு அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறன. இந்த நேரத்தில், கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகள் வருகின்றன. அதனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க சாத்தியமில்லை என்று உணர்த்தும் உத்தியாகவே மாற்று முகாம் தலைவர்களுடனான சந்திப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது திமுக.
கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் கூட்டணியை விட்டு விலகிச் சென்றாலும் எங்களுக்கு அடுத்தடுத்த ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதையும் இந்த சந்திப்புகள் மூலம் உணர்த்தி இருக்கிறது திமுக.
இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு தான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்துவிட்டுப் போன மறுநாளே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகனுடன் சென்று ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என திமுக-வை குஷிப்படுத்தும் விதமான ஸ்டேட்மென்டையும் வெளியிட்ட வைகோ, திமுக அணியில் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்.
அதேசமயம், பிரேமலதாவும் ஓபிஎஸ்ஸும் தவெக கூட்டணி பக்கம் போய்விடாமல் இருப்பதற்காகவும் அவர்களுடனான சந்திப்புகளுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்ததாகவும் சொல்பவர்கள், இதன் மூலம், நீங்கள் எங்கும் போகவேண்டாம்... எங்கள் கூட்டணியிலேயே உங்களுக்கு இடமிருக்கிறது என்று திமுக தரப்பில் சமிக்ஞை காட்டி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
திமுக-வின் கணக்கு இப்படி இருக்க, திமுக சைடிலிருந்தே எங்களுக்கு ஆஃபர் இருக்கிறது என்று சொல்லி கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளிடம் பேரவலிமையை அதிகரிக்க பிரேமதலாவும் ஓபிஎஸ்ஸும் இந்தச் சந்திப்புகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் அறிக்கை வாசிக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்த மறுநாளே, “ஓபிஎஸ் என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேனே” என்று பதறினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். ஆக, தமிழ் பண்பாட்டின் படி நடந்ததாகச் சொல்லப்படும் இந்த சந்திப்புகளை வைத்து ஆளாளுக்கு ஒரு அரசியல் கணக்கைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT