Published : 06 Aug 2025 06:14 AM
Last Updated : 06 Aug 2025 06:14 AM
தென்காசி: அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு ரத்து செய்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார். தென்காசி, அம்பாசமுத்திரம், ஆலங்குளத்தில் நேற்று காலை பிரச்சாரம் மேற்கொண்ட அவர் குற்றாலத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதிமுகவில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணியை உருவாக்க வேண்டும்” என்றார்.
பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து கொடுக்கப்படும். படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.. தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள், பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடியபோது பழனிசாமி பேசியதாவது: தாமிரபரணி ஆற்றில் எந்தெந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வைத்திருந்தோம். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அதை அமல்படுத்தவில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாங்கள் கொண்டுவந்த பல திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது. பாபநாசம் அணைஉபரிநீரை மணிமுத்தாறு அணைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி மீண்டும் வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT