Published : 06 Aug 2025 05:17 AM
Last Updated : 06 Aug 2025 05:17 AM
சென்னை: நிர்வாகக் குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
விவசாய பெருமக்களின் வாழ்நாள் உழைப்பும் சேமிப்பும் அறிவாலய அரசின் அலட்சியத்தால் நம் கண்முன்னே கருகி சருகாவது மிகுந்த மன வேதனையளிக்கிறது. சிறு மழை பெய்தாலும் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போகின்றன, ஆறுகள் பெருக்கெடுத்து அணைநீர் திறந்துவிடப்பட்டாலும் பயிர்கள் வாடிப் போகின்றன.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும் ஆறுகள், வாய்க்கால்கள், கால்வாய்கள் போன்றவைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை, மழைநீரை சேமிக்க தரமான வடிகால்கள் அமைக்கப்படவில்லை. முக்கிய ஆறுகளில் நீர்வரத்து நிரம்பக் காணப்பட்டாலும், கிளை ஆறுகள், வாய்க்கால்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன.
தமிழகத்துக்கு தேவையான பாசனத்தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறி நீர்வளத் துறை என்ற ஒரு தனித்துறையையே உருவாக்கி விளம்பரப்படுத்திக் கொண்ட திமுக அரசு, வழக்கம்போல துறை செயல்பாடுகளில் கோட்டை விட்டுவிட்டது. இனியும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது காலம் தாழ்த்துவது பேராபத்தில் சென்று முடியும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் தமிழகத்தின் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். திமுகவின் அலங்கோல ஆட்சியில் அழிவை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் நமது நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காகத் தான் தமிழக பாஜக சார்பில் நீர்வளம் காப்போம் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோன்று திமுக எனும் தீயசக்தியிடம் இருந்தும் தமிழகம் மீட்டெடுக்கப்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கான அஸ்திவாரம் இடப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT