Published : 06 Aug 2025 12:28 AM
Last Updated : 06 Aug 2025 12:28 AM
சென்னை: தொழில் முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் ஆக.14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. மேலும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளையும் விரைவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த 4-ம் தேதி தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், தேர்தல் நெருங்கும் நிலையில் மக்கள் நலனுக்கான புதிய திட்டங்களையும் கொண்டுவருவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இவற்றில் சில திட்டங்கள் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலி்ன் உரையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, திட்டங்கள் தொடர்பாகவும், புதிய தொழில் முதலீடுகளுக்காகவும் அமைச்சரவை கூடி விவாதித்து, உரிய முடிவெடுப்பது வழக்கம். அவ்வகையில் வரும் 14-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வரின் பயணங்கள், முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம், சாதி படுகொலைகளைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி, பல்வேறு முதலீடுகள் மற்றும் சலுகைகளுக்கு இக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT