Published : 05 Aug 2025 08:30 PM
Last Updated : 05 Aug 2025 08:30 PM
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், அசோக்குமார் தனது இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது அசோக்குமார் தரப்பில், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செய்த பரிந்துரை கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரஜ்னீஷ் பதியால், “அமெரிக்கா செல்வதற்கு முன்பாக தனது மனைவி மற்றும் மகளின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைப்பதாக அசோக்குமார் உறுதியளித்தார். ஆனால் தற்போது மனைவியின் பாஸ்போர்ட்டை வழங்க முடியாது எனக் கூறுகிறார்” என்றார்.
அப்போது அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “அசோக்குமாருடன் அவரது மனைவியும் அமெரிக்கா செல்கிறார். ஆனால் அவரது மகள் இங்குதான் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். அசோக்குமாருக்கு செப்.4 அன்று அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. அவர் எங்கும் தலைமறைவாக மாட்டார். அப்படி தலைமறைவானால் ஏற்படும் பின்விளைவு என்ன என்பதும் அவருக்குத் தெரியும்” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், அமெரிக்கா செல்லவுள்ள அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆக.8-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT