Last Updated : 05 Aug, 2025 07:43 PM

2  

Published : 05 Aug 2025 07:43 PM
Last Updated : 05 Aug 2025 07:43 PM

“கூட்டணியை நம்பி இருக்கிறது திமுக... மக்களை நம்பி இருக்கிறது அதிமுக!” - பழனிசாமி பேச்சு

தென்காசி: “திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதாக கூறும் ஸ்டாலின், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. அதிமுக மக்களை நம்பி உள்ளது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலையில் குற்றாலத்தில் இருந்து புறப்பட்ட அவர், தென்காசியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “இந்த பகுதி வேளாண்மை தொழில் நிறைந்த பகுதி. அதிமுக ஆட்சியில் வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டு முறை பயிர்கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கி னோம். குடி மராமத்து திட்டத்தில் குளங்களை தூர் வாரினோம். பேரிடர் காரணமாக பாதிப்புக்கள்ளான விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டு தொகை பெற்று தந்தோம்.

விவசாயிகள் பாதிக்கப்படும்போதெல்லாம் நிவாரணம் வழங்கியது அதிமுக அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், ஆடு, மாடுகள், கோழிகள் கொடுத்து, பொருளாதாரத்தை உயர்த்தினோம். ஆனால் திமுக அரசு ஒரு திட்டத்தையாவது விவசாயிகளுக்கு கொண்டு வந்ததா ? அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தியதுதான் திமுக. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்துவிட்டது. இந்த ஆட்சி தேவையா?

சட்டத்தின் ஆடசியை நடத்தியது அதிமுக. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டுகின்றனர். அதிகமான கல்லூரிகளை திறந்து கல்வியில் சாதனைகள் படைத்தோம். மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகளை கொண்டுவந்தது அதிமுக அரசு. 2019-20ல் 54 சதவீதம் பட்டப்படிப்பு படிக்கும் சூழ்நிலையை கொண்டுவந்தோம். அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் அதிமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்ததும் விலையில்லா மடிக்கணி திட்டத்தை நிறுத்தினர். 10 ஆண்டில் 52 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு லேப் டாப் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடரும்.

அம்மா மினி கிளினிக்கை கொண்டுவந்தோம். அதையும் மூடியது திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்படும். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு கழித்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். அதிமுக ஆட்சியில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்தோம். 168 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தினோம். திமுக அரசு 4 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மக்களை நினைத்து பார்ககிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 46 பிரச்சினைகளை விசாரித்து, மனு பெற்று, தீர்ப்பதாக சொல்கின்றனர். திமுகவின் ஆயுள் காலம் இன்னும் 7 மாதம்தான் உள்ளது. அதற்குள் இதனை நிறைவேற்ற முடியுமா? ஏன் 4 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளை பற்றி கவலைப்படவில்லை? தனது வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படுவதுதான் ஸ்டாலின் நோக்கம். ஆட்சிக்கு வரும் முன் பெட்டிகளை வைத்து மனுக்களை பெற்றனர் திமுகவினர். ஆட்சிக்கு வந்ததும் பிரச்சினைகளை தீர்ப்பதாக சொன்னார்கள். இப்போது ஏன் மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா ?

சொத்து வரி உயர்த்தப்படாது என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் வரியை 100 சதவீதம் உயர்த்திவிட்டனர். வரி மேல் வரி போட்டு மக்களை கஷ்டப்படுத்தும் இந்த அரசு தேவையா? கரோனா காலத்தில் மக்களை பாதுகாத்தது அதிமுக அரசு. ரேஷன் கடைகளில் 12 மாதம் விலையின்றி பொருட்கள் கொடுத்தோம்.

திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதாக கூறும் ஸ்டாலின், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. அதிமுக மக்களை நம்பி உள்ளது.

சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, கடையநல்லூரில் பாலிடெக்னிக், தென்காசியில் அரசு சட்டக் கல்லூரி, புளியங்குடியில் குளிர்பதன கிடங்கு, கொப்பரை தேங்காய் மின்வார உலர் வசதி, தென்காசியில் சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் மருத்துவ கல்லூரி, மாம்பழச்சாறு உற்பத்தி நிலையம், எலுமிச்சை குளிர்பதன நிலையம், ராமநதி ஜம்புநதி திட்டம், தென்காசியில் அரசு வனக் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. இவை எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு தொடர வேண்டுமா?

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இடம் வழங்கி கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். தீபாவளியன்று பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் 119 கோடியில் பணி தொடங்கப்பட்டு, பணி முடிந்தும் அதனை திறக்க முடியாமல் திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறக்கப்படும். தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை திட்டத்தை கொண்டுவந்தது அதிமுக அரசு. தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, அரசு பள்ளிகளில் கட்டிட வசதி, தென்காசி மாவட்டத்தில் புதிய பாலங்கள் கட்டினோம்.

இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் திட்டத்தை கொண்டுவந்தோம். திமுக அரசு ரத்து செய்த இந்த கால்வாய் திட்டம் மீண்டும் அமைக்கப்படும். தென்காசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வசதிகள் செய்யப்படும்” என்றார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகனதாஸ் பாண்டியன், தளவாய்சுந்தரம், ஆர்.பி.உதயகுமார், காமராஜ், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா எம்எல்ஏ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x