Published : 05 Aug 2025 01:30 PM
Last Updated : 05 Aug 2025 01:30 PM
விருதுநகர்: விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமான ஒப்பந்த காலம் 20 நாட்களில் முடியும் நிலையில், இதுவரை 50 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்து கொண்டார்.
விருதுநகரில் வாடகை கட்டிடத்தில் இயங்தி வரும் அரசு அருங்காட்சியகத்திற்காக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.6.80 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2024 பிப்ரவரி 26ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் இக்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதம் 25ம் தேதி உடன் கட்டுமான ஒப்பந்த நிறைவடைகிறது. தற்போது 50 சதவீதம் மட்டுமே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகள் எப்போது முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 3 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் பேசுகையில், ”நீங்கள் அருங்காட்சியகம் கட்டி முடிக்கும் வரை திறப்பு விழாவிற்காக முதல்வர் காத்திருப்பாரா ? என கேள்வி எழுப்பினார். மேலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் டூம் அமைப்பதற்கு கூட உங்களை கெஞ்ச வேண்டியுள்ளது. கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். இதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாமே.
அந்த பிரச்சினைகளை தீர்க்கதான் நாங்கள் உள்ளோம். தொல் பொருள்கள் அனைத்தும் சாதாரண எலும்புக் கூடுகள் போன்றவை அல்ல. அவைகள் மதித்து மிக்கவை. அதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மெத்தனப் போக்கு சரியில்லை என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் ஒப்பந்ததாரரை அழைத்து விரைவில் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT