Published : 05 Aug 2025 06:09 AM
Last Updated : 05 Aug 2025 06:09 AM
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நேற்று திருத்தணியில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘உள்ளம் தேடி’- இல்லம் நாடி’(வாக்குச் சாவடி நிர்வாகிகளுடனான சந்திப்பு), ‘கேப்டனின் ரத யாத்திரை’--’மக்களை தேடி மக்கள் தலைவர்’ (மக்களுடன் சந்திப்பு) ஆகிய பெயர்களை கொண்ட தமிழகம் முழுவதுமான முதற்கட்ட சுற்றுப்பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பாக்கத்தில் தொடங்கினார்.
இந்த சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று காலை ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச் சாவடி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷ், உயர்மட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, ஆவடி மாநகர் மாவட்ட செயலாளர் நா.மு.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாலை பிரேமலதா திருத்தணியில் நடைபயணம் மேற்கொண்டார். திருத்தணி அரக்கோணம் சாலையில், புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நடைபயணம், மபொசி சாலை வழியாக சுமார் 2 கிமீ தூரத்துக்கு நடைபெற்றது.
இதில், திருத்தணி முருகன் கோயில் மலை பாதை சந்திப்பு அருகே பிரேமலதாவுக்கு, தேமுதிக நிர்வாகிகள், கிரேன் மூலம் மாலை அணிவித்ததோடு, 5 அடி உயரம் கொண்ட வெள்ளிவேல் வழங்கினர். அந்த வேலை கையில் ஏந்தியவாறும், மக்களை பார்த்து கையசைத்தவாறும் பிரேமலதா நடைபயணம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT