Published : 05 Aug 2025 09:25 AM
Last Updated : 05 Aug 2025 09:25 AM
நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது கடந்த தேர்தலில் திமுக அளித்தவாக்குறுதி. இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது அதை நிறைவேற்ற கிளம்பி இருக்கிறது ஆளும் கட்சி. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை... ஆனால், அதற்காக தேர்வு செய்திருக்கும் இடத்தை வைத்துத்தான் இப்போது சர்ச்சை.
நாகர்கோவிலின் மையப்பகுதியில் உள்ளது அனாதைமடம் மைதானம். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ‘அவிட்டம் திருநாள் மைதானம்’ என்றிருந்த இது அனாதைகள் தங்குவதற்காகவும், இளைப்பாறுவதற்காகவும் மன்னர்களால் வழங்கப்பட்டது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவிலான இந்த மைதானம் தற்போது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுக்கூட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடுவதன் மூலம் இந்த மைதானத்தால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 ஆயிரம் வரைக்கும் வருமானம் ஈட்டி வருகிறது மாநகராட்சி.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி நாகர்கோவிலில் சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்க ஆயத்தமாகி வருகிறது திமுக அரசு. அதற்கான இடமாக அனாதைமடத்தை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அடையாளம் காட்டி இருப்பது தான் இப்போது புயலைக் கிளப்பி இருக்கிறது. அண்மையில் கூடிய நாகர்கோவில் மாமன்றக் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 52 கவுன்சிலர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சியின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இப்படியொரு முடிவை எடுத்த ஆட்சியருக்கு எதிராக கூட்டத்தில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அனாதைமடத்துக்குப் பதிலாக மாற்று இடத்தில் டைடல் பார்க்கை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், டைடல் பார்க் அமையும் இடத்தை பார்வையிடுவதற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அண்மையில் அனாதைமடம் வந்தார். அவரிடம் வடக்கு தாமரைக்குளம் உப்பளம் பகுதி உள்ளிட்ட சில இடங்களை டைடல் பார்க்கிற்காக மேயர் மகேஷ் பரிந்துரைத்தார். ஆனால், அனாதைமடம் நகரின் மையப்பகுதியில் இருப்பதுடன், திருவனந்தபுரம் விமான நிலையம், திருநெல்வேலி வழித்தடம் உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்களும் இருப்பதால் இந்த இடம் தான் சரியாக இருக்கும் என வரைபடம் சகிதம் அமைச்சருக்கு விளக்கினார் ஆட்சியர் அழகுமீனா. அதை ஏற்றுக்கொண்டு அனாதைமடத்திலேயே டைடல் பார்க் அமைக்க டிக் செய்தார் அமைச்சர்.
மாமன்றத்தின் சிறப்புத் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு எதிராக 52 மாமன்ற உறுப்பினர்களும் இப்போது ஓரணியில் திரண்டு நிற்கிறார்கள். அவர்கள், “அடுத்த மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக புயலைக் கிளப்புவோம். எங்களோடு சேர்ந்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய திமுக மேயர் மகேஷ் இப்போது ஏனோ மவுனம் காக்கிறார். ஆனால், டைடல் பார்க் இடத்தை மாற்றாவிட்டால் மக்களைத் திரட்டி நாகர்கோவிலை ஸ்தம்பிக்க வைப்போம்” என்கிறார்கள்.
இதுகுறித்து மேயர் மகேஷிடம் பேசினோம். “2009-ல் வருவாய்த் துறை கையகப்படுத்த நினைத்த அனாதைமடமானது பெரும் போராட்டத்திற்கு பிறகு மாநகராட்சி (அப்போது நகராட்சி) வசமாக்கப்பட்டது. நாகர்கோவிலில் டைடல் பார்க் வருவதை யாரும் எதிர்க்கவில்லை. அனாதைமடத்தில் அதை அமைப்பதைத் தான் எதிர்க்கிறார்கள். மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் போட்ட பின்னரும் அனாதைமடமே தேர்வாகியுள்ளது. இந்த விஷயத்தில், ஒரு மேயர் என்ற முறையில் முதல்வரும் அரசும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் நிலையில் தான் நான் இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT