Last Updated : 03 Aug, 2025 03:49 PM

 

Published : 03 Aug 2025 03:49 PM
Last Updated : 03 Aug 2025 03:49 PM

திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை

சென்னை: திருப்பத்தூர் பள்ளி மாணவர் முகிலனின் மர்ம மரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்தும் விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவன் முகிலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவன் முகிலன் கடந்த சில நாள்களுக்கு முன் காணாமல் போன நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வந்த காவலர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து மாணவரின் உடலை மீட்டுள்ளனர். முகிலனை இழந்த பெற்றோர் துயரத்தில் வாடும் நிலையில், அவர்களின் துயரத்தை மேலும் அதிகமாக்கும் வகையில் மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பது கண்டிக்கத்தக்கவை.

மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் முகப்பு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி கிணற்றுக்குள் குதிப்பதோ, தவறி விழுவதோ சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும் போது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதன் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் எண்ணம் இருப்பது உறுதியாகிறது. மாணவனின் மர்ம மரணத்தில் தொடர்புடைய எவரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.

அண்மைக்காலங்களாகவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே பள்ளியில் ஜூன் மாதம் திருவள்ளூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி மர்மமாக உயிரிழந்திருந்தார். அரசு பள்ளிகளில் இப்படியாக மர்ம மரணங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.

திருப்பத்தூர் பள்ளி மாணவன் மட்டுமின்றி, மற்ற பள்ளிகளிலும் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் மாணவர் முகிலனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x