Published : 03 Aug 2025 06:46 AM
Last Updated : 03 Aug 2025 06:46 AM
தேனி: மருத்துவ முகாமில் திமுக எம்.பி. மற்றும் எம்எல்ஏ ஆகியோர் மேடையிலேயே காரசாரமாக ஒருமையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள சக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்த இம்முகாமில், திமுக தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி, பெரியகுளம் திமுக எம்எல்ஏக்கள் மகாராஜன், சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமின் வரவேற்பு பேனரில் தனது படம் இல்லாததைக் கண்டு கோபத்துடன் மேடைக்கு வந்த தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், தனது படம் இடம் பெறாதது ஏன் என்று ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் கேட்டு, கோபமாக திட்டினார்.
நான்தான் கொடுப்பேன்... பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்கட்டமாக கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கட்டுமான நல வாரியம் சார்பில் விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகைக்கான ஆணையை வழங்க முற்பட்டபோது, அதை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பறித்து, ‘இது நான் வாங்கிக் கொடுத்தது, நான்தான் கொடுப்பேன்’ என்று கூறி, பயனாளியிடம் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏ மகாராஜனை ஒருமையில் திட்டத் தொடங்கினார். இதைக் கேட்ட எம்எல்ஏ மகாராஜனும், கோபத்தில் காரசாரமாக பேசினார். மைக்கில் இந்த வாக்குவாதம் பலருக்கும் கேட்டதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மேடையிலேயே இருவரும் உரத்த குரலில் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மைக்கை வாங்கி, அவசர அவசரமாக நன்றி கூறி, நிகழ்ச்சியை முடித்து வைத்தார். பின்னர் எம்.பி. எம்எல்ஏ.ஆகியோர் அடுத்தடுத்து அங்கிருந்து வெளியேறினர். மேடையிலேயே திமுக எம்.பி. எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் காரசாரமாக சண்டையிட்டது, திமுகவினரின் கோஷ்டிப் பூசலை வெளிக் கொண்டு வந்துள்ளது என்று பலரும் விமர்சித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT