Published : 03 Aug 2025 06:40 AM
Last Updated : 03 Aug 2025 06:40 AM
தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடியில் தொழில்முனைவோர், விவசாயிகள், உப்புஉற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அகில இந்திய தொழில் வர்த்தக சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், நாட்டுப்படகு மீனவர் சங்கம், சிறு வணிகர் சங்கம், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றம், வழக்கறிஞர்கள் சங்கம், புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஸ்பிக் தொழிலாளர் நலச்சங்கம், வாழை, கடலை விவசாயிகள் சங்கம், பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம், பெந்தகொஸ்தே சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி விமான நிலையம் அமைக்க 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு முழு காரணம் அதிமுக அரசுதான். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, வி.வி.டி. சந்திப்பு பகுதியில் பாலம் அமைக்கவும், உப்பளத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள் தூர்வாரப்படும். தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி பெற ஒற்றைச்சாளர முறையை மீண்டும் கொண்டுவருவோம். அதிமுக ஆட்சியில்தான் சாலைகள் தரமாக விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்தியாவிலேயே அதிக நீளத்தில் தார் சாலைகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்ற சூழலை உருவாக்கினோம்.
2022 காவல் துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2,348 பேர் கண்டறியப்பட்டு, 140 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சீண்டல் நடப்பதற்கு போதைப் பொருள் பழக்கமே முக்கியக் காரணம்.
போலீஸாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தால்தான் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். 2021-க்கு முன்பு காவல் துறை எப்படி செயல்பட்டு, தற்போது எப்படி செயல்படுகிறது? மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது, இரும்புக்கரம் கொண்டு குற்றங்கள் தடுக்கப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
பின்னர், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் அவர் வழிப்பட்டார். அவருக்கு, தூய பனிமய மாதா படத்தை பங்குத்தந்தை ஸ்டார்வின் ஆசீர் அளித்தார். முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT