Published : 03 Aug 2025 12:17 AM
Last Updated : 03 Aug 2025 12:17 AM

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கியது: மக்களை பரிவுடன் கவனிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இந்த முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகளை பார்வையிட்டார். பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு, கோட்டைக்கு வெளியே நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இதுதான். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் இந்த முகாமை தொடங்கி வைத்துள்ளனர். இத்திட்டத்தில் தொடர்ந்து 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள ஊரக, குடிசை பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு முகாமிலும், மருத்துவர்கள் உட்பட 200 மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். அங்கு 17 தனித்துவமான மருத்துவ சேவைகள் வழங்கப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம்களில் அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்கள் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்பட உள்ளன. பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன், காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன. உங்கள் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் மொத்தமாக ஃபைல் செய்து உங்களிடம் வழங்கப்படும். இந்தமருத்துவ அறிக்கை, உங்களது ‘மெடிக்கல் ஹிஸ்டரி’ போன்றது. எதிர்காலத்தில் நீங்கள் எந்த சிகிச்சைக்கு, எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இது பயன்படும்.

நகர்ப்புறத்தில் படித்த, வசதியானவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை, கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய பாமரமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எனவே, இந்தவசதியை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும். அதற்காக அவர்களை நோயாளி என்று கூறக்கூடாது. எனவே, முகாமுக்கு வரும் மக்களை மருத்துவ பயனாளியாகத்தான் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பார்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தினரை கவனிப்பது போல, முகாமுக்கு வருபவர்களை அக்கறையுடன், பரிவுடன் கவனிக்க வேண்டும். எதிலும், எப்போதும் தமிழகம் ‘நம்பர் ஒன்’ ஆக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதுபோன்ற திட்டங்களால், மருத்துவ சேவைகள் வழங்குவது மற்றும் மக்களின் உடல்நலனை பாதுகாப்பதிலும் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக நிச்சயம் திகழும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலர் முருகானந்தம், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரே நாளில் 44,418 பேர் பயன்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் ஒரு முகாமுக்கு தலா ரூ.1.08 லட்சம் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சனிதோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர். மாவட்டத்துக்கு ஒன்று என தமிழகம் முழுவதும் 38 இடங்களில் நடைபெற்ற முகாமில் நேற்று ஒரே நாளில் 44,418 பேர் பயன்பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x