Published : 03 Aug 2025 12:19 AM
Last Updated : 03 Aug 2025 12:19 AM
சென்னை: ‘படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு விவசாயம் குறித்த சிந்தனையை ஏற்படுத்த வேண்டும்’ என்று ஐஐடி மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
சென்னை ஐஐடி மற்றும் ‘வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பின் சார்பில் இளையோர் வேளாண் மாநாடு நேற்று நடை பெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், ‘வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ அமைப்பின் தலைமை ஊக்குவிப்பாளருமான அண்ணாமலை, இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய தாவது: இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு மிகக் குறைவாக இருக்கிறது. அதை மாற்றக்கூடிய முயற்சியாகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இயற்கை வேளாண் பொருட்களைத் தேடி வாங்கும் அளவுக்கு மக்க ளிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்கிறோம். இதனால், நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். விவ சாயம் என்பது முற்றிலும் ஒரு புதிய துறை. தகவல் தொழில்நுட்பத்துறை வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறி யுள்ள பலரை, குறிப்பாகப் பெண் களையும் நாம் பார்க்கிறோம்.
விவசாயம் செய்ய வேண்டும் என்ற பலர் விரும்பினாலும் போதிய அளவு நிலம் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள இளையோர் வேளாண் ஊக்குவிப்பு திட்டம் விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நல்லதொரு தளத்தை ஏற்படுத்தி தரும். இங்கு வரும் இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து கற்றுத்தருவார்கள். மாணவர்கள் படிக்கும் காலத்தி லேயே அவர்கள் மனதில் வேளாண் குறித்த சிந்தனையை ஏற் படுத்த வேண்டும். இதுதான் புதிய திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இவ்வாறு கூறினார்.
ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, ‘‘வேளாண் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு ஆற்ற முடியும். ஆளில்லா விவசாயம், மின்சாரத்தில் இயங்கக்கூடிய டிராக்டர்கள், மிகவும் எடை குறைந்த வேளாண் கருவிகள் பயன்பாடு குறித்து ஐஐடியில் ஆராய்ச்சி மேற்கொண் டோம். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுமாறு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வறட்சியையும், பெருவெள்ளத்தையும் தாக்குப்பிடிக்கக் கூடிய தானியங்களும், பயிறுகளும் தேவை’’ என்றார்.
நாண்டி பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் மனோஜ் குமார் பேசும்போது, "எங்கள் அறக்கட்டளை ஏறத்தாழ 10 லட்சம் விவசாயிகளை இயற்கை விவ சாயிகளாக மாற்றியிருக்கிறது. அவர்கள் ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயம் செய்கின்றனர்" என்றார். முன்னதாக, பவுண்டேஷன் தலைமை செயல் அலுவலர் பிரபாகர் அறிமுகவுரை ஆற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT