Published : 02 Aug 2025 10:37 PM
Last Updated : 02 Aug 2025 10:37 PM
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
நயினார் நாகேந்திரனை 6 முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடந்த ஜூலை 24-ம் தேதி நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.
உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளில் வெளியானதன் அடிப்படையிலோ அதற்கான ஏற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால், எதையும் செய்யவில்லை.
இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் நயினார் நாகேந்திரன் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT