Published : 02 Aug 2025 09:32 PM
Last Updated : 02 Aug 2025 09:32 PM

விழுப்புரம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நெரிசலில் சிக்கித் தவித்த நோயாளிகள்!

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நோயாளிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏக்கள் பொன்முடி, லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே மக்கள் வர தொடங்கினர். 15 வகை மருத்துவ சிகிச்சை என்பதால் ஏராளமானோர் திரண்டனர்.

புறநோயாளிகள் முன்பதிவுக்கு ஒரு அறை மட்டும் ஒதுக்கப்பட்டது. ஓரே அறையில் மக்கள் குவிந்ததால் காற்றின் சுழற்சி தடைப்பட்டு மூச்சு விடவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும், சுகாதாரத் துறை ஊழியர்களும் அவதிப்பட்டனர். இதனால் முன்பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருந்தனர். இதேபோல் ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் அறையிலும் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இதே நிலை வேறு சில பிரிவுகளிலும் இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 39 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளன. நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ள முகாம்களில், நெரிசலில் சிக்கி நோயாளிகள் தவிக்காமல் இருக்க துல்லியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x