Published : 02 Aug 2025 02:45 PM
Last Updated : 02 Aug 2025 02:45 PM
சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள், பிடிவாரண்ட் நிலையில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1985 ஆம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை 61 ஆயிரத்து 301 வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப்படவில்லை எனவும் தலைமைப் பதிவாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடி வாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து அதிர்ச்சியைத் தெரிவித்தார். இது நீதிபரிபாலன முறையை பலவீனப்படுத்தி விடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரிவாரண்ட்களை அமல்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகளையும், காவல் துறையினரும், நீதித்துறையினரும் பின்பற்றாவிட்டால், அது நீதித்துறையின் மாண்பையும், மரியாதையையும் மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையையும் குலைத்து விடும் எனவும் நீதிபதி வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
மேலும், பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்ளச் செய்யும் வகையில் சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதை ஊக்குவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகள் அமல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மகேஷ் பாபு- வை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்து நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆய்வு செய்து ஒருங்கிணைப்பு அதிகாரி அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை கோப்புக்கு எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையினர் தாக்கல் செய்யும் குற்ற பத்திரிகைகளை தாமதமின்றி ஆய்வு செய்து கோப்பு எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களில், சம்பந்தப்பட்ட குற்றப்பத்திரிகைகள் எந்த நீதிபதி முன் விசாரிக்கப்பட வேண்டும் என பிரித்து அனுப்பும் வகையிலான நடைமுறையை வகுத்து அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நீதி பரிபாலனத்தில், காவல் துறைக்கும், நீதிமன்றங்களுக்கு கூட்டு பொறுப்பு உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தீர்வு தேடி நீதிமன்ற கதவுகளை தட்டும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நடைமுறை குளறுபடிகளால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT