Published : 02 Aug 2025 05:30 AM
Last Updated : 02 Aug 2025 05:30 AM
சென்னை: தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காக தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகளில் தற்போது தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம்: இந்த இயக்கத்தை செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தூய்மை இயக்கத்தின்கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்துக்கான நிலையான கழிவு மேலாண்மை தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அறிவியல்பூர்வமாக நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும் அவற்றை மறுசுழற்சி செய்யவும் ஒரு வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை - ஐஐடியுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இதற்காக, தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் (CTCL) நிர்வாக இயக்குநர் மற்றும் சென்னை ஐஐடி இயக்குநருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளப்பட்டு வரும் சவால்களை களையவும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.உமா, ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT