Published : 02 Aug 2025 08:30 AM
Last Updated : 02 Aug 2025 08:30 AM

திருநாவுக்கரசர்... ஆர்.எம்.வீ... அடுத்து ஓபிஎஸ்..! - அதிமுக பிளவை ஆதாயமாக்கப் பார்க்கிறதா திமுக?

தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ வியூகத்தை சற்றே விரிவாக்கி, ‘கூட்டணியில் யார் யார்’ என்ற அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது திமுக. முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா சந்திப்பு நிகழ்வுகள், அந்த ஆட்டத்தின் அதிரடி காட்சிகள். ‘ஓபிஎஸ் தரப்புக்கு 5 சீட்கள் ஒதுக்க திமுக சம்மதம்... நிதியமைச்சர் பொறுப்பை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்’ என்றெல்லாம் அதற்குள்ளாக செய்திகள் தெறிக்கின்றன.

அதிமுக-வில் தனக்கான உரிமையை நிலைநாட்ட முடியாமல் தொடர் பின்னடைவைச் சந்தித்து களைத்துப் போன ஓபிஎஸ் கடைசியில், “எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் இணையத் தயார்” என ஒட்டுமொத்தமாக சரணாகதி அடைய வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தனது முடிவில் உறுதியாய் இருக்கும் இபிஎஸ், “காலம் கடந்து விட்டது” என்று கதவடைத்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமித் ஷாவின் தமிழக வருகையின் போது, அவரைச் சந்திக்க ஓபிஎஸ் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அடுத்தாற்போல், பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் போட்ட உருக்கமான ‘பெட்டிஷன்’ மறுக்கப்பட்டதுடன் அந்த கடிதத்தின் வரிகளும் வெளியானதால் வேதனையின் உச்சத்திற்கே போனார் ஓபிஎஸ்.

இதையடுத்து தனது ஆஸ்தான அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனின் யோசனைப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். அதோடு நிற்காமல், காலையில் நடைபயணத்தின் போதும், மாலையில் வீட்டிலும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தவர், “அரசியலில் நிரந்தர நண்பன், எதிரி என யாரும் இல்லை” என ‘யாருக்கும் தெரியாத’ விஷயத்தைச் சொல்லி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களில், முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு மிகவும் முக்கியமான அரசியல் நகர்வாக அமைந்துள்ளது என்று சொல்லும் அரசியல் பார்வையாளர்கள், “இதுவரை பெரும்பாலும் இருமுனைப் போட்டியைச் சந்தித்து வந்த தமிழக தேர்தல் களம், வரும் தேர்தலில் 4 முனை போட்டிக்கு தயாராகிறது. இதில், புதுவரவான தவெக பெறப்போகும் வாக்குகள், தமிழக அரசியலில் திருப்பதை ஏற்படுத்தலாம். கூட்டணி ஆட்சி என்று விஜய் வீசியிருக்கும் வலையில் எந்தக் கட்சி சிக்கினாலும், அது திமுக-வுக்கு இப்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே அதிமுக-வை விமர்சிப்பதைத் தவிர்த்து, எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாச வாக்குகளை இழுக்கும் வியூகத்துடன் தவெக செயல்படுகிறது. கடைசி நேரத்தில் பாஜக-வை உதறிவிட்டு அதிமுக தங்களுடன் வரலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போகுமானால், அதற்குப் பதிலாக ஓபிஎஸ்ஸை தங்கள் அணியில் இடம்பெற வைக்கவும் தவெக தரப்பில் காய்கள் நகர்த்தப்பட்டன.

இதனிடையே, தொகுதி வாரியாக திமுக எடுத்த சர்வேக்களில், பல தொகுதிகளில், தவெக தங்களுக்கு கடும் போட்டியைத் தரலாம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்தே, ஓபிஎஸ்ஸை தவெக பக்கம் போகவிடாமல் திமுக தங்கள் பக்கம் திருப்பி இருப்பதாக தெரிகிறது.

தங்களது அரசியல் முடிவை செப்டம்பர் 4-ல் மதுரையில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்பதாக ஓபிஎஸ் சொல்லியிருந்த நிலையில், தவெக பக்கம் போகலாம் என்ற அவரது சிந்தனைக்கு, ஆரம்பத்திலேயே அணைபோடவே ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பை திட்டமிட்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். தனது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைவது ஓபிஎஸ்ஸுக்கான முதல் வாய்ப்பு. இதன் மூலம், தான் மற்றும் தனது விசுவாசிகளின் அரசியல் எதிர்காலம் காப்பாற்றப்படும் என்பதால் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் உடன்பட அதிக வாய்ப்புள்ளது. அல்லது, ஆர்.எம்.வீ., திருநாவுக்கரசர் பாணியில் தனி கட்சி தொடங்கி திமுக-வுடன் கூட்டணி வைக்கலாம்.

பொதுவாக எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் திமுக பக்கம் போவதை அவர்களை பின் தொடரும் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்பார்கள். ஆனால், எம்ஜிஆரின் போர்ப்படை தளபதிகளாக விளங்கிய ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் போன்றோர் திமுக-வுடன் கூட்டணி கண்டதும் முத்துசாமியில் தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக-வில் ஐக்கியமாகி அங்கேயும் அமைச்சர்களான வரலாறும் இந்த விஷயத்தில் ஓபிஎஸ் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். அதோடு, ‘பாஜக-வின் வருகை திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து’ என பொதுத்தளத்திலும், ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என தன் இனத்தார் மத்தியிலும் பேசுவதற்கு வசதியாக பல தலைப்புகளும் இருப்பதால் திமுக உடனான பயணத்தில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பார்” என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x