Published : 02 Aug 2025 05:55 AM
Last Updated : 02 Aug 2025 05:55 AM
கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்துக்காக நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்த பழனிசாமி நேற்று காலை செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் பேசும்போது, “கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு அச்சுறுத்தலாக உள்ள, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தடை செய்ய வேண்டும்.
இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து 6 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியின்போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட்டன. எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களை நாடு முழுவதும் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
சத்துணவில் கடலைமிட்டாய்: கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் கே.கண்ணன் பேசும்போது, “அதிக புரதச் சத்து கொண்ட கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் இணைத்து, வாரம் இருமுறை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அதிமுக ஆட்சியின்போது அதிக சலுகைகளும். வசதிகளும் செய்யப்பட்டன.
தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க அதிமுக ஆட்சியின்போது மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்தோம். தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உருவாகிஉள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தாமிரபரணி-வைப்பாறு திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும். விவசாய விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க, அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் தொழில் சிறக்க அதிமுக என்றும் துணைநிற்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, ஆர்.பி.உதயகுமார் சி.விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் மற்றும் தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT