Last Updated : 01 Aug, 2025 06:29 PM

 

Published : 01 Aug 2025 06:29 PM
Last Updated : 01 Aug 2025 06:29 PM

ஓபிஎஸ் விலக இபிஎஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணமா? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

மதுரை: “மீண்டும் தமிழகம் வரும்போது பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்படும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் மற்றும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: "ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது எதற்காக என்பது தெரியவில்லை. ஏற்கெனவே போன் மூலமாக ஓபிஎஸ்ஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அவரிடமும் , தினகரனிடமும் போனில் பேசிக்கொண்டே இருந்தேன். ஒபிஎஸ்ஸிடம் சட்டமன்றத்தில் சந்திக்கும்போதும், போனிலும் பேசிக்கொண்டு தான் இருந்தேன். அவர் விலகியது அவரது சொந்த பிரச்சினையா அல்லது வேறு பிரச்சினையா என்பது தெரியவில்லை. மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் வெளியேறியதாக கூறுவது பற்றி எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லியிருந்தால் நான் அனுமதி வாங்கித் தந்திருப்பேன்.

இபிஎஸ் கொடுத்த அழுத்தத்தால்தான் ஓபிஎஸ் வெளியேறினாரா என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஓபிஎஸ் விலகுவதாக அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே அவரிடம் பேசியிருந்தேன். எதுவும் முடிவெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். ஓபிஎஸ் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அவருக்குத்தான் தெரியும். அவர் கூட்டணியை விட்டு வெளியேறியது பலவீனமா என்பது தேர்தலில்தான் தெரியவரும்.

தமிழக முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. இது குறித்து முதல்வர் தரப்பில் எதுவும் அறிவிப்பு வெளியிடவில்லை. சொந்த விஷமாகவும், தொகுதி பிரச்சினைக்காகவும் அவர் சந்தித்து இருக்கலாம். நான் கூட சொந்த பிரச்சினைக்கு முதல்வர் சந்திக்கலாம். ஓபிஎஸ் - முதல்வர் சந்திப்பு குறித்து அவர் அறிவிப்பு வெளியிடும் வரை என்னவென்று கருத்துச் சொல்ல முடியாது. மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக பிரதமரை சந்திக்க வைப்போம்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x