Published : 01 Aug 2025 04:36 PM
Last Updated : 01 Aug 2025 04:36 PM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், வாதங்களை துவங்காததால், தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 - 2001 ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் மருங்காபுரி திமுக எம்.எல்.ஏ.வாகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், பி.எம்.செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்குப் பின் அவர் அதிமுகவில் இணைந்தார்.
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 81 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிட்ட நீதிமன்றம், அவரது மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகளுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதங்களை துவங்க மேல் முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மகன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களை கைது செய்யவும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT