Published : 01 Aug 2025 02:57 PM
Last Updated : 01 Aug 2025 02:57 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கையின் அழைப்புக்காக இரவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அச்சிறுமியை ஒரு மனித மிருகம் முள்புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.
இரு வாரங்களுக்கு முன் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் குறைவதற்கு முன்பாகவே இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பதைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என்ற ஐயம் தான் எழுகிறது.
இந்த கொடிய நிகழ்வு தொடர்பாக அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எரோமல் அலி என்ற இளைஞரை ஊர்மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் சிறுமி மீதான பாலியல் தாக்குதல் முயற்சியை தடுத்திருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரங்கள், வெற்று நாடகங்களை நடத்துவதை விடுத்து குழந்தைகளும், பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT