Published : 01 Aug 2025 02:24 PM
Last Updated : 01 Aug 2025 02:24 PM

பாஜகவுடனான உறவை முறித்த ஓபிஎஸ் - அதிமுக கூட்டணிக்கு பின்னடைவா?

ஒருவழியாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ். அவரின் இந்த முடிவு 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர், தமிழகத்தில் மூன்று முறை முதல்வர், அதிமுகவின் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரித்தவர் என ஓபிஎஸ்சின் டிராக் ரெக்கார்டு மிகப்பெரியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தர்மயுத்தம், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என அவர் எடுத்த பரிமாணங்களும் பல. இப்போது வேறு வழியே இல்லாமல் பாஜக அணியை விட்டும் வெளியே வந்துள்ளார்.

ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார் என்பதை விடவும், வெளியேற்றப்பட்டார் என்பதே நிதர்சனம். ஏனென்றால், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது முதலே ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட ஆரம்பித்தது பாஜக. அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வந்த போதெல்லாம், ஓபிஎஸ் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கூட்டணிக்கு உள்ளே கொண்டுவரக்கூடாது என்பதில் இபிஎஸ்ஸும் உறுதியாக நின்றார். எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்றுகூட சொல்லிப் பார்த்தார் ஓபிஎஸ், ஆனாலும் இபிஎஸ் அசைந்து கொடுக்கவில்லை. தொடர் புறக்கணிப்புகளின் வலி தாங்காமல் இப்போது பாஜக அணியிலிருந்து விலகியுள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ், தவெக அணியில் இணையலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் அடுத்தடுத்து சந்தித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பன்னீர்செல்வம். இதுபற்றிய கேள்விக்கு ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை’ என்றார் ஓபிஎஸ். அவர் தனித்து களமிறங்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ்சின் விலகல் அதிமுக – பாஜக கூட்டணிக்கு சவாலாக அமையுமா?

அதிமுகவில் இருந்து விலகிய பின்னர் ஓபிஎஸ் சந்தித்த முதல் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல். அப்போது, பாஜக கூட்டணியில் தனது அணிக்காக ஒரு தொகுதியை மட்டும் பெற்றுக்கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஐயுஎம்எல் கட்சியின் நவாஸ் கனி 45 சதவீத வாக்குகள் பெற்று வென்றார். ஓபிஎஸ் 30 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடம்பிடித்தார். அதிமுக 8.99 சதவீத வாக்குகளையும், நாதக 8.80 சதவீத வாக்குகளையும் பெற்றது.

ஓபிஎஸ்சுக்கு தென்மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அப்படி பார்க்கையில் தென்மாவட்டங்களில் 2024 தேர்தலில் மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தேனியில் அதிமுக 3ம் இடம் பிடித்தது. கன்னியாகுமரியில் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று 4ஆம் இடம்பிடித்தது அதிமுக.

அதிமுகவுக்கு காலம்காலமாக மிகவும் சாதகமான மண்டலமாக தென்மண்டலம் இருந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவு, சசிகலா - தினகரன் - ஓபிஎஸ் பிளவு காரணமாக தென்மாவட்டங்களில் 2019 முதல் நடக்கும் தேர்தல்களில் அதிமுகவால் சோபிக்க முடியவில்லை. ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என அதிகளவில் குரல் எழுப்பப்படும் மண்டலமாகவும் தென்மண்டலமே உள்ளது.

எனவே, ஓபிஎஸ்சின் இப்போதைய விலகல், அதிமுக – பாஜக கூட்டணிக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 2021 தேர்தலில் வெறும் 2 ஆயிரம் வாக்குகளுக்குள் 17 தொகுதிகளில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல 5 ஆயிரம் வாக்குகளுக்குள் 39 தொகுதிகளில் வெற்றி தோல்வி நிர்ணயமானது. சுமார் 10 தொகுதிகளில் வெறும் ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி தோல்வி மாறிப்போனது. எனவே சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதே தேர்தல் கணக்கு.

திமுக கூட்டணி இப்போது பலமான நிலையில் உள்ளது. எனவே அக்கூட்டணியை எதிர்க்க பலமான எதிரணி வேண்டும். ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் தற்போது தமாகாவை தவிர எந்த கட்சியும் இல்லை. பாமக, தேமுதிக ஊசலாட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் போன்றவர்களும் வெளியேறுவது அக்கூட்டணிக்கு சிறிய அளவிலாவது பாதகத்தை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஒருவேளை ஓபிஎஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்து, அதில் இன்னும் சில கட்சிகள் இணைந்தால், அது பலமான அணி போன்ற தோற்றத்தை உருவாக்கும். அது நிச்சயமாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு பின்னடைவாகவே மாறும். ஓபிஎஸ் ஒருவேளை தனித்து களமிறங்கினாலும், தென்மாவட்டங்களில் நிச்சயம் சேதாரத்தை உருவாக்குவார் பன்னீர்செல்வம். தினகரனும் ஓபிஎஸ் வழியில் பாஜக அணியிலிருந்து கழண்டு கொண்டால், அது நிச்சயமாக மத்திய, தென்மாவட்ட தேர்தல் ரிசல்டில் எதிரொலிக்கும்.

தேர்தல் கணக்கில் 1 + 1 என்றால் 11 என்பார்கள். அதுபோல 11 – 1 என்றால், அது 10 ஆகாமல் பூஜ்ஜியம் ஆகிவிடவும் வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x