Published : 01 Aug 2025 07:01 AM
Last Updated : 01 Aug 2025 07:01 AM
தூத்துக்குடி / சென்னை: சாதி, மதம் பெயரால் நடக்கும் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தினரை, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு திருமாவளவன் நேற்று சென்று சந்தித்தார்.
கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும். சுர்ஜித் ஆத்திரப்பட்டு இக்கொலையைச் செய்யவில்லை. கவினோடு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அழைத்ததுமே, அவரோடு கவின் போயிருக்கிறார். நீண்டகாலமாக திட்டமிட்டுத்தான் இந்த கொலை நடந்திருக்கிறது.
சுர்ஜித்தின் பெற்றோர் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான், பின்னணியில் உள்ள கூலிப்படையினர் யார் என்பதைக் கண்டறிய முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு, நிலம் வழங்குவதுடன், புதிதாக வீடு கட்டித் தர வேண்டும்.
கவின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுபாஷினி வெளியிட்ட வீடியோ, அச்சுறுத்தல் காரணமாக வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க சட்டம் அவசியம். உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாநிலமும் இதைப் பின்பற்றவில்லை.
நாடாளுமன்றத்திலும்... இது தொடர்பாக நானும், ரவிக்குமார் எம்.பி.யும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். வாய்ப்பு கிடைத்தால் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன். காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்ததாக கவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் கட்டப்பஞ்சாயத்து செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
எம்ஜிஆர் காலம் அல்ல... சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: சாதிய கொலைகளை தேசிய அவமானமாக கருத வேண்டும். ஐ.டி. ஊழியர் கொலை தொடர்பான எஃப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டவரின் தாயார் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், அவரை கைது செய்யத் தயங்குவது ஏன்? எம்ஜிஆர் காலத்து சூழ்நிலை, தற்போதும் இருக்கும் என தவெக தலைவர் விஜய் நம்புகிறார்.
எத்தனையோ திரைக் கலைஞர்கள் அரசியலுக்கு வந்தபோதும், மக்கள் அவர்களை ஏற்கவில்லை. திரைப்படத்தை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மாநிலம் தமிழகம் என்று விமர்சித்த காலம் மாறிவிட்டது. தங்களுக்குத் தேவையானவர்களை மக்கள் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT