Published : 01 Aug 2025 08:58 AM
Last Updated : 01 Aug 2025 08:58 AM
வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர் மேயர் தரப்பும் எம்எல்ஏ தரப்பும் பிளாட்களை குறைந்த விலைக்கு எழுதிக் கேட்பதாக அதிமுக-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்டு மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் பலரும் காத்திருக்கின்றனர். மனைப் பிரிவுக்கு ஒப்புதல் தரவேண்டுமானால் இடத்தின் மதிப்புக்கு ஏற்ற விதத்தில் சம்திங் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான விலையில் பிளாட்களை பத்திரம் பதிந்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கண்டிஷன் போடுவதாலேயே இந்தத் தேக்க நிலை என்கிறார்கள்.
வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் தண்டபாணி என்பவர் மாநகராட்சி எல்லைக்குள் வசந்தபுரம் பகுதியில் உள்ள தனது பூர்விக சொத்தான சுமார் 1.74 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து கடந்த 2022-ல் லே அவுட் அப்ரூவலுக்கு விண்ணப்பித்துள்ளார். அப்ரூவல் வழங்குவதற்கான அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருக்கிறார். ஆனாலும் அப்ரூவல் கொடுக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
இதற்கிடையில், வேலூர் எம்எல்ஏ-வான ப.கார்த்திகேயன் பேரைச் சொல்லி தண்டபாணியை தொடர்பு கொண்டவர்கள், “லே அவுட் அப்ருவல் தொடர்பாக மேயர் தொடங்கி மாமன்ற உறுப்பினர்கள் வரைக்கும் அத்தனை பேரும் கேள்வி கேட்பார்கள். அவர்களை சரிக்கட்ட வேண்டுமானால் முதல் கட்டமாக 25 லட்சம் கொடுக்க வேண்டும். அத்துடன், நாங்கள் கேட்கும் 6 மனைகளை நாங்கள் கேட்கும் விலைக்கு நாங்கள் சொல்லும் நபர்கள் பெயரில் கிரையம் செய்து கொடுக்க வேண்டும்” என முதல் போட்டவர்களைப் போல் கேட்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு தண்டபாணி அதிர்ந்து போயிருக்கிறார்.
இந்த டீலுக்கு ஆரம்பத்தில் சம்மதிக்க மறுத்த தண்டபாணி, தனக்கு வேலை ஆகவேண்டும் என்பதற்காக ரொக்கத்தை குறைத்துக் கொள்ளும்படியும், 6 மனைகளுக்குப் பதிலாக 2 மனைகளை தருவதாகவும் இறங்கிப் போய் பேசி இருக்கிறார். ஆனால் கண்டிஷன் போட்டவர்களோ, “நாங்கள் கேட்டதைத் தருவதாக இருந்தால் பேசவும். இல்லாவிட்டால் உங்களால் முடிந்ததைப் பார்க்கலாம்” என விரைப்பாகப் பேசி இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் இழுத்த இழுவைக்கு தண்டபாணி போகாததால் மூன்றாண்டுகள் கடந்தும் அவரது மனைப்பிரிவுக்கு அப்ரூவல் கிடைக்கவில்லை. உப்புச் சப்பில்லாத காரணங்களைச் சொல்லி அவரது லே அவுட் அப்ரூவல் மனுவை கிடப்பில் வைத்திருக்கிறது மாநகராட்சி.
இது ஒரு சாம்பிள் மட்டுமே எனச் சொல்லும் வேலூர் பகுதி ரியல் எஸ்டேட் முதலாளிகள், “எம்எல்ஏ தரப்பின் யோசனையைக் கேட்டு இப்படி பல லே அவுட்களுக்கு அப்ரூவல் கொடுக்காமல் போட்டு வைத்திருக்கிறது மேயர் தரப்பு” என்று ஆதங்கப்படுகிறார்கள். இப்படியான சூழலில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த அதிமுக அண்மையில் வேலூரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், லே அவுட் அப்ரூவலுக்கு யார் யாருக்கு என்னவெல்லாம் தரவேண்டும் எனப் பட்டியல் வாசித்து பகிரங்கப்படுத்தியது. அடுத்ததாக, ரியல் எஸ்டேட் முதலாளிகளும் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
இது குறித்து விளக்கமறிய வேலூர் எம்எல்ஏ-வான ப.கார்த்திகேயனை நாம் தொடர்பு கொண்டபோது அவரது செல்போனை எடுத்துப் பேசிய அவரது உதவியாளர், “எம்எல்ஏ முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறார். வந்ததும் விஷயத்தைச் சொல்கிறேன். இது விஷயமாக அவரே உங்களிடம் பேசுவார்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். ஆனால், அதன் பிறகு எம்எல்ஏ நம்மை அழைக்கவே இல்லை.
மேயர் சுஜாதா இது விஷயமாக நம்மிடம் பேசுகையில், “மனைப்பிரிவுக்கு ஒப்புதல் கேட்பவர்கள் கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை, மின்கம்பம் அமைப்பதற்கான அனுமதி, பாதாள சாக்கடை திட்டத்துக்கான அனுமதி என அரசு கூறும் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவது இல்லை. இதையெல்லாம் முறையாக பின்பற்றி மனு கொடுத்தால் எவ்வித தாமதமும் இன்றி லே அவுட் அப்ரூவலை மாநகராட்சி நிர்வாகம் நிச்சயம் வழங்கும்.
வசந்தபுரம் பகுதியில் லே அவுட் அப்ரூவல் கேட்டு விண்ணப்பித்த தண்டபாணி யாரென்றே எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அந்த இடத்தை நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். மனைகளை ஒட்டி கழிவுநீர் கால்வாய் செல்வதால் அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்க வேண்டும். மனைகளின் உயரத்தைக் காட்டிலும் மழைநீர் கால்வாய் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் பேஸ்மென்ட்டை உயர்த்த வேண்டும் எனக் கூறினோம்.
மனை வரைபடத்தில் பாசனக் கால்வாய் அகலம் குறிப்பிடப்படாமல் உள்ளது. அதையும் சரி செய்ய அறிவுறுத்தினோம். மனைப்பிரிவில் போடப்பட்டுள்ள சாலைகள் தரமற்றதாக உள்ளது. அதையும் சரி செய்யச் சொன்னோம்.
மனையில் ஒருபுறம் மட்டுமே மழைநீர் கால்வாய் உள்ளது. இப்படி பல குறைகள் இருப்பதால் அனைத்தையும் சரிசெய்யுங்கள் அப்ரூவல் கிடைக்கும் எனச் சொன்னோம். ஆனால் அதையெல்லாம் சரி செய்யாத அவர், மாநகராட்சி மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. அந்த மனைப்பிரிவுக்கு அப்ரூவல் கொடுக்க கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவிக்கும்போது என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்?” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT