Published : 01 Aug 2025 05:42 AM
Last Updated : 01 Aug 2025 05:42 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை தொடர்ந்தும் மேம்படுத்த ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட அளவிலான கற்றல் அடைவுத் தேர்வு (ஸ்லாஸ்) முடிவுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: தமிழகத்தில் 16-வது மாவட்டமாக தற்போது சென்னையில் உள்ள தலைமை ஆசிரியர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுள்ளேன். நமது மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகும்.
ஆனால், சென்னையில் தனியார் பள்ளிகள் அதிகம். கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துவிடலாம் என்ற எண்ணம் சென்னையில் வசிக்கும் பெற்றோரிடம் உள்ளது. தனியார் பள்ளிக்கு சென்றது போக மீதமுள்ளவர்கள் தான் அரசுப் பள்ளிகளைத் தேடி வருகின்றனர். அதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான கல்வியை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளியில் பாடங்களை மட்டுமின்றி வாழ்க்கைக்கான அறத்தையும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரம் மிகவும் முக்கியம். அவற்றை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT