Published : 01 Aug 2025 04:58 AM
Last Updated : 01 Aug 2025 04:58 AM
சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆக.7-ம் தேதி சர்வதேச மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது என சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமானது, ஊட்டச்சத்து, எழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் உணவு தட்டுப்பாட்டை நீக்கியது மற்றும் அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைத்ததில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு மிகப்பெரியது. அவரின் 100-வது பிறந்தநாள் ஆக.7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் ஆக.7 முதல் 9-ம் தேதி வரை ‘நீடித்த பசுமை புரட்சி - இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் பல்வேறு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மிக முக்கியமாக 120 விஞ்ஞானிகள், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக அவர் உருவம் பொறித்த தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் உலக அறிவியல் அமைப்பு சார்பில் விவசாயம் மற்றும் அமைதிக்கான விருது இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவருக்கு 25 ஆயிரம் டாலர் பரிசுடன் இந்த விருது வழங்கப்படும். மேலும் எம்.எஸ்.சுவாமிநாதனின் சாதனைகள் குறித்து பல்வேறு ஆளுமைகளின் கருத்துகளோடு ‘தி இந்து’ குழுமம் தயாரித்துள்ள ‘புக் ஆஃப் ட்ரிப்யூட்ஸ்' என்ற புத்தகமும் வெளியிடப்படுகிறது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பதோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT