Published : 31 Jul 2025 06:58 PM
Last Updated : 31 Jul 2025 06:58 PM
தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவுடன் இணக்கமாக தனது போக்கை மாற்றினார். தர்மயுத்தம் தொடங்கி இபிஎஸ்ஸுடன் மீண்டும் இணைந்தது வரையிலும், ஏன்... அதன் பின்னரும் கூட ஓபிஎஸ்-ஸுக்கு பாஜக ஆதரவாக இருந்தது. ஒரு மாநில முதல்வர் கூட பிரதமரை சந்திக்க காத்திருக்க வேண்டிய நிலையில், மோடியையோ அல்லது அமித் ஷாவையோ சர்வசாதாரணமாக சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உலா வந்தார். அவருக்கு டெல்லி மேலிடத்தில் இருந்த நெருக்கம் இபிஎஸ் தரப்பை எரிச்சலடைய வைக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் போக்குகள் அவருக்கு பெரிதாக சாதகமாக அமையவில்லை. இந்தச் சூழலில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஓபிஎஸ் ராமராதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வெற்றி பெறாவிட்டாலும் கூட, இரண்டாம் இடம் பிடித்தார். கிட்டத்தட்ட 40% வாக்குகளைப் பெற்று, தனக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கு மங்கிவிடவில்லை என்று உணர்த்தினார்.
அந்தத் தேர்தலுக்குப் பின்னர் பாஜக தமிழகத்தில் தனது வீச்சை விரிவுபடுத்த எடுத்த உத்தியில் மாற்றம் செய்ய தேவை ஏற்பட்டது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுந்தன. அது சாத்தியாமாகாமல் போனதற்கு அண்ணாமலையும் காரணம் என்ற குமுறல்களும் எழுந்தன.
விளைவு, முதலில் லண்டனுக்கு படிக்க அனுப்பிவைக்கப்பட்ட அண்ணாமலை, பின்னர் தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தே அப்புறப்படுத்தபட்டார். அந்த இடத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் வந்தார். அப்போதே, அதிமுகவுடன் சமரசம் பேச அவர் தோதான முயற்சிகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, அதிமுக கூட்டணியும் அமைந்துவிட்டது.
பாஜகவுக்குள் இந்த சலசலப்புகள் எழுந்தபோதே ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு எல்லாம் சற்று கதிகலங்கிப்போய் தான் இருந்தன. ஒருவேளை, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்தால், என்னவாவது என்று கலக்கம் இருந்தது வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும் உணர முடிந்ததாகவே இருந்தது.
அதிமுக - பாஜக கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது, திமுகவை எதிர்க்கும், வீழ்த்தும் நோக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்திருக்கும் என்ற சப்பைக் கட்டுகள் அதிருப்தியாளர்களிடமிருந்து வந்தது. கூட்டணிக்குள் இபிஎஸ் வந்தபின்னர் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படுவது தொடங்கிவிட்டதாகவே அவர் தரப்பு கூறுகிறது.
அதன் உச்சபட்சம்தான் அண்மையில் தூத்துக்குடி வந்த பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கோரியதும், அது நிராகரிக்கப்பட்டதும். ‘தங்களை சந்திப்பது என் பாக்கியம்’ என்ற அளவுக்கு ஓபிஎஸ் இறங்கிவந்தும் கூட பிரதமர் இரக்கம் காட்டவில்லை. இதைத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டணி முறிவு குறித்து பேசும்போது, “பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடே அறியும். கூட்டணி முறிவுக்கு காரணம் சொல்லத் தேவையில்லை” என்றார்.
இத்தகைய சூழலில் ஓபிஎஸ் விலகியதில் யாருக்கு ஆதாயம் என்று பார்த்தால், பலரையும் பட்டியலிடலாம். முதலில் தவெக-வை எடுத்துக் கொள்வோம். புதிதாக கட்சி தொடங்கி இரண்டாவது மாநில மாநாட்டுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தவெக, விஜய்தான் முதல்வர் வேட்பாளர், திமுக - அதிமுக - பாஜக அதிருப்தியாளர்கள் எல்லோரும் எங்களுடன் கைகோக்கலாம் என்று மிகப் பெரிய ஆப்ஷனைக் கொடுத்து காத்திருக்கிறது.
இப்போது பாஜக அதிருப்தியால், ஒருவேளை ஓபிஎஸ் அந்த அணிக்குச் சென்றால் தென் மாவட்டங்களில் நன்கு அறியப்பட்ட முகமான ஓபிஎஸ் அக்கட்சிக்குள் சேர்வது அவர்களுக்கு பலமாக இருக்கும். ஏற்கெனவே தவெக மீதான முக்கியமான விமர்சனங்களில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தட்டும், ஆனால் அதற்கு அவர்களுக்கு 234 பரிச்சயமான முகம் இருக்கிறதா என்பதே!
இந்தச் சூழலில் தவெகவுக்கு ஓபிஎஸ்ஸின் விஜயம், விஜய்க்கு லாபம். மதுரையில் அவர் நடந்தப்போகும் மாநாட்டில் ஓபிஎஸ் மேடையேறி பேசுகிறார் என்ற ப்ராபபிளிட்டியை யோசித்துப் பாருங்கள். அது அவருக்கு மிகப்பெரிய சாதகமல்லவா?!
தவெகவுடனான கூட்டணியை ஓபிஎஸ் மறுக்கவில்லை. செய்தியாளர்கள் கேள்விக்குக் கூட, கூட்டணிக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பாஜகவுடனான உறவு முறிவு அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. அந்தச் சந்திப்பு அவர்கள் சொல்வதுபோல், இயல்பான சந்திப்பா அல்லது திட்டமிட்டதா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் சொன்னது போல், வெறும் வணக்கம் சொன்ன சந்திப்பாக அது இருக்கவில்லை என்பதை அவரே மீண்டும் நிரூபித்துவிட்டார். மாலையில் மீண்டும் முதல்வரை நேரில் சந்தித்துள்ளார். இந்த முறை மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துடன் சென்றுள்ளார். 20 நிமிடங்கள் நடந்த சந்திப்புக்குப் பின்னர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பூசி மெழுகினாலும். ‘அரசியலில் எதுவும் நடக்கலாம். எனக்கு சுயமரியாதை முக்கியம்’ என்றும் சொல்லி ஊகங்களை இன்னும் வலிமையாக்கியுள்ளார் ஓபிஎஸ்.
ஏற்கெனவே, திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்பதில் உங்களுக்கு உடன்பாடா என்ற கேள்விக்கு, பண்ருட்டி ராமச்சந்திரன், “யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” என்று சூசகமாக பதில் சொல்லியிருந்தார். இப்போது ஓபிஎஸ்ஸும், எதுவும் நடக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரே நாளில் இரண்டு முறை சந்திப்பு. இதில், ஏதேனும் அரசியல் நிமித்தமான ஆலோசனை நடந்திருந்தால், அன்வர் ராஜா போல் ஓபிஎஸ்ஸும் திமுகவுக்கு சென்றால் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. அது மட்டுமல்லாது, ஓபிஎஸ் ஒரு தனிக்கட்சித் தொடங்கி, அது திமுக அணியில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறது கணிப்புகள்.
ஆங்காங்கே அதிருப்தி அலைக்குள் சிக்கியிருக்கும் திமுகவுக்கு, பாஜகவை எதிர்ப்பதற்காக ஓபிஎஸ் அவர்கள் அணிக்கு வரும் பட்சத்தில் அது அவர்களுக்கு லாபம் தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஏற்கெனவே தேனி பக்கமிருந்த தங்கத் தமிழ்ச்செல்வனும் திமுகவில் தான் இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
தவெக, திமுகவுக்கு ஓபிஎஸ் பாஜகவுக்கு சொன்ன ‘பை பை’ சாதகம்தான். ஆனால், பாஜகவுக்கு, அதுவும் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்ற துடிப்புக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர் தான் என்கிறார்கள் நிபுணர்கள். மோடியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட அடுத்த நாளே, பாஜகவை கண்டித்து அறிக்கைவிட்ட ஓபிஎஸ், சற்றும் தனது வேகத்தை தளர்த்திவிடாமல் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளார்.
ஓபிஎஸ் தமிழக அரசியலில் கவனமே பெறாமல் இருந்த நிலையில், அவரது அடுத்தடுத்த நகர்வுகள் கவனம் பெறுவதே அவருக்கு இன்னும் அரசியல் முக்கியத்துவம் இருப்பதற்கான சான்று. இந்த நிலையில் இபிஎஸ்ஸுக்காக அண்ணாமலையை கழற்றிவிட்டதால் விமர்சனத்துக்கு உள்ளான பாஜக, இப்போது மீண்டும் இபிஎஸ்ஸுக்காக ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டியதற்கும் விமர்சிக்கப்படுகிறது.
அதிமுகவை ஒருங்கிணைத்து ஓரணியில் திரட்டாமல், அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இரண்டாம் இடத்துக்காவது வந்துவிட்டு பின்னர் அக்கட்சியையே ஓய்த்துவிடலாம் என்று பாஜக திட்டமிடுவதாக பலரும் பகிரங்கமாக பேச ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிரா பாணியில் பாஜக தமிழகத்தில் அரசியல் செய்வதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது!
இவற்றுக்கு மத்தியில், ஓபிஎஸ் இப்போது எடுத்துள்ள முடிவில் நிலையாக இருக்க வேண்டும். முன்புபோல் இபிஎஸ்ஸுடன் ‘டூ’ விடுவது, பழம் விடுவது மாதிரியும், டிடிவியை விமர்சித்துவிட்டு அவரை சந்திப்பது மாதிரியும், பாஜக வேண்டாம் என்று சொல்லிவிட்டு தேர்தல் நெருக்கத்தில் மோடி அழைத்தார், அமித் ஷா அழைத்தார் என்று முடிவை மாற்றக் கூடாது என்ற அக்கறைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அப்படி ஓபிஎஸ் தடுமாறினால் அவரது அரசியல் பயணத்துக்கு அதுவே முற்றுப்புள்ளியாகக் கூட மாறலாம் என்றும் கணிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT